யாம் பெற்ற இன்பம் -5

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை, எந்தவிதக் காரணமும் தெரியாத ஒரு நிலையில் திடீரென்று தாக்குகின்ற துன்பங்களை, எதிர்த்துப் போராடி, எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தாமல், சகிப்புத் தன்மையுடன் அவற்றை ஏற்றுப் பொறுமையாக இருப்பவர்களுக்கு, ஏதாவது ஒரு கட்டத்தில் அவற்றிலிருந்து நிச்சயம் விடுதலை கிடைக்கும். எனது கர்மாவும், அறியாமையும் தான் எனது துன்பங்களுக்குக் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மீக உளவியலில் துன்பம் என்பது ஒரு பரிசு என்று சொல்லப்படுகிறது. நாம் அனுபவிக்கின்ற துன்பம் தான் நம்மில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. நீண்ட காலத் துன்பம், இறுதியில் ஆத்ம ஓளியைக் காட்டுவதாக அமைகின்றது.

துன்பத்திற்கு எதிராகப் போராடுவது அகந்தையை வளர்க்கும். துன்பத்தை ஏற்றுக்கொள்வது என்னில் உயர்நிலையைக் கொண்டு வரும். எனவே உள்ளுணர்வோடு துன்பத்தை அனுபவிக்கக் கற்க வேண்டும். இந்த அனுபவம் நம்மைச் சரியாக வடிவமைக்கும். துன்பத்தின் வழியாக ஆத்மாவை அடைய முடியும். துன்பம் ஈகோவாக உணரப்பட்டால், அது எதிர்மறைக் குணங்களாக வெளிப்படும். இது துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஈகோ நிகழ்காலத்தில் செயல்படாது. ஆனால் மூன்று விதமாக தன்னைப் பிரித்து வெளிப்படுத்தப் பார்க்கும். 1) எதிர்பார்த்துச் செயல்பட வைக்கும். 2) தடையை ஏற்படுத்தும். 3) எதிரியாகப் பார்க்கும். உறையாகச் செயல்படும் இந்த உடல், தன்னை அறியாத வரை ஈகோவாகத் தான் செயல்படும்.

தன்னைத் தானே குறை சொல்வது, பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது, சஞ்சலப்படுவது, தனிமையை வெறுப்பது போன்ற குறைகள் இல்லாமல் மகிழ்ச்சி நிலையில், நிகழ்காலத்தில், நம்மால் தனியாக இருக்க முடியுமா? என்று ஆராய்ந்து பாருங்கள். எந்தப் பொழுதுபோக்கிலும் ஈடுபடாமல் அமைதியாக சும்மா இருக்கின்ற நிலை. அது தான் என்னோடு நான் இருக்கின்ற நிலை. இப்படி இருக்க முடிகின்றதா? என்று முயன்று பாருங்கள்.

இந்நிலையில் நிகழ்காலத்தில் ஆத்மாவாகிய என்னோடு நான் உறவு கொள்ளப் பழக வேண்டும். இப்படி என்னோடு நான் உறவு கொள்ள முற்படுகின்றபோது, கடந்த காலம், எதிர்காலம் எல்லாம் எனக்குள் எண்ணங்களாக வந்து குறுக்கிட்டுக் குழப்ப முற்படும். நினைவுகள் அவற்றோடு தொடர்பு கொண்டு போய்விட்டால், என்னோடு என்னை நான் இணைக்க முடியாது. இவற்றை இல்லாமல் செய்து இணைந்தால், என்னுள் ஏற்படுவது அளவிடமுடியாத ஆனந்தமும், சாந்தியும் என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

‘இப்பொழுது’ என்ற இந்த நொடியில் எனக்குள் இருப்பது எண்ணங்களற்ற வெளி. இதில் இருக்கும்போது ஆனந்தம் ஏற்படும். இந்த ஆனந்தத்தைத் தான் அனைவரும் தேடுகின்றனர். ஈகோ இல்லாத ஆன்ம தளப் பார்வையாக இதனை உணர்ந்து பார்க்க வேண்டும். ஈகோவும், நிகழ்காலமும் என்றில்லாமல், நானாகிய ஆத்மாவும், நிகழ்காலமும் என்னும் எதிர்மறையான எண்ணங்கள் இல்லாத நிலைதான் ஆனந்தத்தை என்னுள் நிறைக்கும். நிகழ்காலத்தில் இப்படி ஆத்மாவாக நான் இருந்து ஆனந்திப்பதை, ஈகோ தடுக்க முயற்சிக்கும். சேரவிடாமல் எண்ணங்களாக, எதிர்ப்பு அலைகளாக என்னை அலைக்கழிக்கும். இந்த அறியாமையிலிருந்து விடுபட்டால் தான், நிகழ்காலத்தில் நான் என் உண்மைத் தன்மையில் நிலைத்து ஆனந்திக்க முடியும்.

இதை ஏன் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால், இதை நன்கு ஆழமாகப் புரிந்துகொண்டு, எண்ணங்கள் இல்லாமல் இருக்க, நான் நன்றாகப் பழக வேண்டும் என்பதற்காகத்தான்.; எண்ணங்கள் என்னை நிகழ்காலத்தில் இருக்க விடாது. இப்பொழுது என்பது எனது நண்பனாக இருக்க முடியுமா? எனது ஆத்ம சக்தியே எனக்குள் இருந்து வெளிப்பட்டு எதிர்மறையாகச் செயல்பட்டு, என்னையே வாட்டி வருத்துவதை நான் அனுமதிக்கலாமா?

என்னைச் சுற்றி, என்னோடு தொடர்புகொண்டுள்ள எல்லாமே, அது பொருளாக இருந்தாலும், உறவாக இருந்தாலும், எனது கர்மாவோடு தொடர்புடைய தன்மையால்தான் என்னிடத்தில் வரும். இது உண்மை. ஒரு கரப்பான்பூச்சி கூடக் காரணமில்லாமல் என் வீட்டில் ஊர்ந்து போக முடியாது. அனுபவசாலிகளான பெரியவர்கள் எந்த உயிரினத்திற்குமே தீங்கு செய்ய மாட்டார்கள். பாம்பைக் கண்டால் கூடக் கொல்லாமல், நீ ஏன் இங்கு வந்தாய்? போ! என்று சொல்வார்கள். தேங்காய் மூடியில் இருக்கும் எறும்புகளைக் கூட வெய்யிலில் தட்டிக் கொல்லாமல் நிழலில் தட்டி விலக்குவார்கள். பரிணாமத்தில் உயர, உயரக் கருணையும் வளரும். எவ்வுயிரையும் தம் உயிர் போல் பாவிக்கும் உள்ளம் வரும்.

வெளியாக நிற்கின்ற ஆத்மாவை நேரத்தால் கட்டுப்படுத்த முடியாது. எண்ணத்திற்கு நேரம் இருக்கிறது. ஆனால் விழிப்புணர்விற்கு நேரம் என்பது இல்லை. அதற்கு ‘இப்ப’ என்பது மட்டும் தான் உண்டு. வரையறைக்குக் கட்டுப்படாத, காலவரையறை இல்லாத ஆத்மாவை, விழிப்புணர்வால் தான் பிடிக்க முடியும்.

பொதுவாக நாம் இந்த உலகில் உள்ள அனைத்தையும் சாதாரணக் கண்களால் பார்க்கிறோம். அதுவே இந்த உலகத்தை விஞ்ஞானக் கண்களால் பார்க்கின்றவர்களுக்கு எல்லாமே electro magnetic tension மின்காந்த முரண்பாடாகத் தெரியும். 16 அலைகளால் உருவாக்கப்பட்ட உடலும், 19 அலைகளால் உருவாக்கப்பட்ட உள்ளமும், மின்காந்த முரண்பாடால் அறிவியல் பார்வைக்குக் கண்டறியப்பட்டிருக்கிறது.நாம் பார்க்கின்ற அனைத்துப் பொருள்களுமே அணுக் கூட்டத்தால் உருவானவை என்பது விஞ்ஞானப் பார்வை. இவை இரண்டையும் விட ஆன்மீகப் பார்வையால் ஒருவன் இவற்றைப் பார்க்க முற்படும்போது, அங்கு அவற்றின் வடிவமைப்பும், ஒழுங்கும், அது செயல்படும் நோத்தியும் இறைக்கருணையின் முழு அளவாகத் தெரியும். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரம் பொருளின் அளவில்லாக் கருணையினால் தான் என்பது அவனுக்கு விளங்கும்.

ஆக, மூன்று விதமான பார்வை நமக்கு இருக்கின்றன. புறக்கண்ணால் எவ்வித அறிவுமின்றிப் பார்க்கின்ற பார்வைக்குப் பின்னால் பொருள்களைப் பற்றிய சாதாரண அறிவும், அவை ஏற்படுத்தக்கூடிய உறவுகளால் ஏற்படும் உணர்;ச்சிகளும் மட்டும் தான் இருக்கும். விஞ்ஞானக் கண்ணால் பார்க்கின்றபோது அப்பொருள்களின் பௌதீகத் தன்மைகள், ரசாயனத் தன்மைகள் புலப்படும். ஆன்மீகக் கண்களால் பார்க்கப்படுகின்றபோது இறைக் கருணை ஒவ்வவொரு படைப்பிற்கும் பின்னணியாக, பேரறிவாக இருந்து செயல்படுவதை அறியக்கூடியதாக இருக்கும்.

நமது சாதாரண கண்களை எக்ஸ்ரே கண்களாக மாற்றிப் பார்த்தால் ஒரு பொருளின் உள்ளே இருக்கின்ற அனைத்தும் துல்லியமாகத் தெரியும். எக்ஸ்ரே என்பது சூரியனிடமிருந்து வெளிப்படுகிற கதிர்களில் ஒரு வகை. நம் உடலில் 1.5 கரண்ட் இருப்பதால், எக்ஸ்ரே நம்மில் ஊடுருவ முடிகிறது. ஆனால் மரத்தை இக்கதிர்களால் துளைக்க முடியாது. ஏனெனில் அதில் மின்சாரம் இல்லை.

இந்த மின்சாரம் நம் உடலில் எண்ணங்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த எண்ண ஓட்டத்திற்குப் பின்னால் தான் வெட்டவெளியான ஆத்மா (Space consiouness) இருக்கிறது. எண்ண ஓட்டத்தை இல்லாமல் செய்தால், வெட்ட வெளி ஆத்மா வெளிப்படும். அதனால் தான் மற்ற எண்ணங்களை இல்லாமற் செய்து, ஒரே எண்ணமாக மாற்றுவதற்காக மந்திரங்களை ஜெபிக்கின்ற முறையைப் பலர் பின்பற்றுகின்றனர். ஜெபிக்கின்றபோது ஒரே நினைவாக இருக்க வேண்டும். பிற எண்ணங்கள் குறுக்கிடக்கூடாது. இந்நிலையில் ஒரு மந்திரத்தை உச்சரித்து, அடுத்த மந்திரத்தை உச்சரிக்கும்போது, இடையில் எண்ணங்களற்ற ஓர் இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியில் ஆத்மா வெளிப்படும். எனவே தான் இந்த இடைவெளியை அதிகரிக்க, மனதில் ஓடும் எண்ணங்களைத் தடுத்து நிறுத்த, மனதைத் துாய்மைப்படுத்த மந்திரங்கள் சொல்வது. மனமது செம்மையானால், மந்திரங்கள் தேவையில்லை என்பதன் பொருள் புரிகின்றதா?

இந்த வெளி, நாம் சாதாரண நிலையில் எந்தவிதத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நமக்குள் நிலைபெற்றிருந்தால், அதாவது எண்ணங்கள் இல்லாமல் செயல்பட்டால், ஆனந்தமாகச் செயல்பட முடியும். நிறைவாகச் செயல்பட முடியும். நான் வேலை செய்யுமிடத்தில் ஆத்ம உணர்வோடு செயல்படும்போது, ஆத்ம சக்தி என்னுாடாக வெளிப்பட்டு, எனது வேலை சிறப்பாக அமைகின்றது. ஏனெனில் நான் ஆனந்த நிலையில் இருந்து என் வேலையைச் செய்கின்றேன்.

நாம் அவ்வப்போது சும்மா இருக்கின்ற நிலையில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்துப் பார்க்க வேண்டும். ஆனால் எப்பொழுதும் எதையாவது ஒன்றைச் செய்து பழகிவிட்ட மனிதனால் இப்படி சும்மா இருக்க முடியாது. ஒரு பூனையைப் பாருங்கள்! அது நீண்ட நேரமும் சும்மா ஒரே இடமாக இருந்துகொண்டிருக்கும். நம்மால் அது இயலாது. உடலால் இயங்கினாலும் உள்ளத்தில் சும்மா இருக்கும் கலையை நாம் கற்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் சொல்கிறேன். ஆனந்தத்தை அனுபவிக்க எண்ணமில்லாமல் சும்மா இருக்கப் பழக வேண்டும்.

ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வது மட்டும் போதாது. அறிவாக மட்டும் பெற விரும்பக்கூடாது. பெற்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் அமைதியை, ஆனந்தத்தைப் பெற முயல வேண்டும். எனவே இனி நான் என்பது உங்களைப் பொறுத்தவரை, உடல், மனம், புத்தி ஆகியவை இல்லாத ஆத்மாவே நான்! என்ற கருத்து ஆழமாக இருக்க வேண்டும். சுட்டுவதற்காக மட்டுமே நான் என்பது பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆன்மீகத்தை அறிந்த பிறகு, ஞானக்கண்ணால பார்க்கத் துவங்கிய பிறகு, நான் தான்! என்று ஈகோவுடன் செயல்பட முயன்றால் கர்வ பங்கம் ஏற்படும். தெரியாமல் செய்யலாம்! தெரிந்து செய்தால் துன்பம் தொடரும்!

எல்லாவற்றையும் என்னுள் இருந்து அனுபவிப்பவனே, நான்! அனுபவிப்பவன், உறைகளால் அனுபவிக்கின்றான். ஆனால் இந்த அனுபவங்கள் உறைகளுடனேயே தங்கி விடுகின்றன. அவனைச் சேர்வதில்லை அதாவது, அனுபவத்தின் விளைவுகள் கர்மாவாக, உறைகளுக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. அறியாமை இருக்கும்வரை இந்நிலை தொடரும். உண்மையான நான் யார் என்பதை அறிந்துகொண்ட பிறகு, எனது செயலின் மாற்றத்தினால் கர்மாவாக எதுவும் மாறாது. ‘இப்பொழுது’ என்னும் விழிப்புணர்வில் செயல்படுவதால், செயல் நிகழும்! அது கர்மாவாக மாறாது!

ஈகோ, நிகழ்காலம், நான் என்னும் பொருள் பற்றி இதுவரைப் பார்த்தோம்! ஞானம் அடைந்த பிறகும், அதைப் புரிந்துகொண்டு செயல்படாமல், ஈகோவால் செயல்படுகின்ற தன்மை மாறி, எப்பொழுதும் ஆனந்தத்தை அனுபவிக்கின்ற நிலை ஏற்படவேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு விளக்கமும்! எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதற்கு .இம்மூன்றைப் பற்றிய தெளிவு வேண்டும். எனது சந்தோஷத்தை இல்லாமல் செய்து, என்னைத் துன்பத்தில் ஆழ்த்துவது எனது ஈகோ! ஈகோ என்பது என்னிலிருந்து எனது சக்தியைக் கடன் வாங்கி, என்னை அறியாமையுடன் செயல்படச் செய்து, என்னை வருத்துவது.

ஆத்மாவே நான் என்று அறிந்து, ஈகோவை ஒழித்து, நிகழ்காலத்தில் தொடர்ந்து வெட்டவெளி ஆத்ம நிலையில் இருப்பவர்கள், தெய்வீக நிலையில் வாழ்கின்றனர்!

Click here to view/print this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s