யாம் பெற்ற இன்பம் -4

இந்த பூமியில் உள்ள படைப்புக்களிலேயே மிகவும் சிக்கலான ஒரு படைப்பு மனித மூளை. நமது மூளைக்குள் நுாறு பில்லியன் நியுரோன்கள் நரம்புக் கலன்களாக இருக்கின்றன. ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என ஆராய்ந்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டத்தில் உள்ள விண்வெளியில் நுாறு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவி;த்திருக்கின்றனர். ஆகவே மூளையின் விரிவு, அண்டம். மூளையில் மின்னும் நுhறு பில்லியன் நியுரோன்கள் தான் வான்வெளியில் மின்னுகின்ற நுாறு பில்லியன் நட்சத்திரங்கள். இதைத் தான் நமது சனாதன தர்மம், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது  என்று கூறியிருக்கின்றது. இந்த உடலில் மூளையாக இருந்து இயங்குவது, வானத்தில் நட்சத்திரங்களாக இருந்து இந்தப் பூமியை இயங்கச் செய்கின்றது. என்னுடைய எண்ணங்களையும், ஞாபகங்களையும் நான் ஒதுக்கி வைத்துவிட்டு. வெட்டவெளியாக என்னை உணருகின்றபோது, அண்டத்தில் இருக்கும் சக்தி எனது உச்சியிலிருக்கும் சகஸ்ராரத்தின் வழியாக எனக்குள் நிறைகின்றது. இது தான் தியானத்தின் பயன். தியானத்தில் அமர்ந்து, எண்ணங்களை ஒதுக்கி, என்னுள் வெளியை ஏற்படுத்தியவுடன் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி மேலேறி சகஸ்ராரத்தில் நிற்கின்றது. இந்நிலையில் மேலே இருந்து இறைசக்தி சகஸ்ராரத்தில் இறங்கி என்னுள் கலக்கின்றது.

இந்த நிலையில் நிறைந்துதான் மகான்கள், தம்மை உணர்ந்தவர்களாய் செயல்படுகின்றார்கள். அவர்களுக்குத் தன் செயல் என்ற ஒன்று இல்லை. எல்லாம் அவன் செயல். நாமோ எல்லாம் நாமே செய்வதாக நினைத்து, எண்ணங்களை வளர்த்துக் குழப்பி, எல்லாவற்றையும் வீணாக்கி விடுகின்றோம். இறை சக்தியாய்ச் செயல்பட விடாமல் ஈகோவால் செயல்படும்போது அவை சரிவர நிகழாமல், தோல்வியையும் துன்பத்தையும் தருகின்றன. இதைத் தான் ”குறுக்காலே போவானேன்” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

தர்மவழியில் நடக்கப்பழகினால், எதிர்மறைச் செயல்களில் ஈடுபட மூளை துாண்டாது, என்பதைத்தான் இது குறிக்கின்றது. குறுக்கு வழிகளில் சென்றால் அது அதர்மம். அதன் முடிவு நன்மையைத் தராது. முறையாகச் செயல்பட்டால் அது தர்மம். முதலில் துன்பங்களைக் கொண்டுவந்தாலும் முடிவு நன்மையாக அமையும். உடல் செயல்படாமல் சும்மா இருந்தால், அது தானாக வந்து இதனுடன் இணையும். ஆனால் சும்மா இருக்கிறோமா? என்பது தான் கேள்வி.இப்படி மூளையைக் கொண்டு செயல்படாமல், தானாகச் செயல்படாமல், அதைச் செயல்பட அனுமதித்து, அமைதியாய் இருப்பதுதான் அனுபூதி நிலை. ஆத்ம அனுபூதி என்பது இதுதான். ஆத்மா மட்டுமே செயல்படுகின்ற நிலையில் வாழ்பவர்கள் அனுபூதிமான்கள் ஆவார்கள். ஆத்ம அனுபூதி நிலையை அடைந்த பிறகு ஞானமும் தேவையில்லை.

உலகம் முழுவதிலும் ஆன்மீக எழுச்சி பரவத் தொடங்கியுள்ள காலமாக இன்றைய காலகட்டம் அமைந்திருக்கின்றது. என்றும் நிலைபெற்றதாகவும், இறையாற்றலிலிருந்து உள்ளுணர்வால் பெறப்பட்ட உண்மைகளைக் கொண்டதாகவும், உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை உலக நாடுகளில் உள்ள தேடல் உணர்வு கொண்டோர் புரிந்து கொண்டுவிட்டனர்.

ஆன்மீகத்தின் உயர்வை, ஆத்மத் தேடலின் முக்கியத்துவத்தை, இந்துக்களைவிட இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உணரத் துவங்கிவிட்டனர். இந்தத் தேடல் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகின்றது. பல புதிய மதங்களை உருவாக்கியவர்களின் கருத்துக் கொள்கைகளின் பின்னணியில் இந்தியாவின் பழங்கால முனிவர்கள் தான் இருந்திருக்கின்றனர், என்பது அறிய வேண்டிய உண்மை.

ஆரம்பகாலத்தில் வெறும் எழுத்தாளராகப் பணிபுரிந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவியல் வெற்றிகளுக்குப் பின்புலத்தில் காரணமாக இருந்தவை, உபநிடதங்களே. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் ஓர் இந்திய விஞ்ஞானியை நண்பராகப் பெற்றிருந்தார். அவரோடு கொண்ட கடிதத் தொடர்புதான் ஐன்ஸ்டீனைப் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயத் துாண்டியது.

அந்த இந்திய விஞ்ஞானி ஒரு தவயோகியிடம் உபநிடதங்களை நன்றாகக் கற்றவர், அவர் தாம் கற்றறிந்த கருத்துக்களை தனது நண்பரான ஐன்ஸ்டீனுக்குக் கடிதம் மூலம் எழுதித் தெரிவித்து, அறிவு பூர்வமாக அவற்றைப் பற்றி விவாதிப்பார். அக்கருத்துக்கள் இப்பிரபஞ்ச அமைப்பைப் பற்றிய அற்புதங்களைப் பற்றிச் சிந்திக்க ஐன்ஸ்டீனைத் துாண்டின. நமது உபநிடதங்கள் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்புலமாக நின்று உதவின. அவரது உணர்வுக்குப் பின்னால் இருந்தவை, உபநிடதங்களின் உன்னத உண்மைகளே!

இதே அடிப்படையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான புகழ்பெற்ற ‘நாஸா’வில், உபநிடதங்களும், பண்டைய முனிவர்களின் விண்வெளித் தொடர்பான நுால்களும், நுாலகங்களில் ஒரு பிரிவாகவே சேகரிக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது அமெரிக்காவின் நியுஜெர்ஸியில் உள்ள செடன் ஹால்பல்கலைக்கழகத்தில் (Setan Hall University) பகவத்கீதை பாடமாக்கப்பட்டிருப்பதுடன், ஒரு கிறித்துவ தேவாலயத்தில், அந்த மதபோதகரே உபநிடதக் கருத்துக்களின் உயர்வுகளைத் தமது ஆசியுரையின் ஊடாக எடுத்துரைத்துப் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

இவ்வகையில், ஸ்ரீலங்கா பல்கலைக்கழகத்தில், (யாழ்ப்பாண வளாகம்)  எமது குருவான ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதியின் ‘ஒளிரும் உண்மைகள்’ தொடர் ஆன்மீக நுhல்கள் அனைத்தும் இந்து நாகரீகத்துறை முதுமாணிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆய்வு நுால்களாக வைக்கப்பட்டுள்ளன. அதோடு அந்நுால்கள், நுாலகங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது மதிப்பிற்குரிய ஒரு தகவல்!

நவீன விஞ்ஞானக் கருத்துக்களுடன், நமது தர்மநெறியின் உயர்வுகளை ஸ்வாமி பரமாத்மானந்தா மேற்குறித்த நுால்களில் மிகச் சிறப்பாக விளக்கங்கள் கூறியுள்ளார். வளரும் இளம் தலைமுறையினரின் அறிவுபூர்வமான கேள்விகளுக்குச் சரியான பதில் கூறத் தெரியாமல் திகைக்கும் பெற்றோருக்கு இந்த நுால்கள் மிகச் சிறந்த விதத்தில் உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முதலில் நமக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தானே, பிறருக்கு அவற்றை எடுத்துக்கூற முடியும்?

நமது சனாதன தர்மத்தின் சிறப்புக்களையும், நமது தர்மத்தின் உண்மைகளைப் பற்றியும், நம்மைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால் தான், நம்மில் பெரும்பாலோர் தர்மப்படி வாழத் தெரியாமலும், பிற மதங்களைத் தேடி மாறிச் செல்கின்ற பிழையான மனப்போக்கு கொண்டவராகவும் இருக்கின்றனர்.

வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் உள்ளவர்கள், தாராளமாக இந்த யோக வேதாந்த நிறுவனத்தில் வந்து இணைந்து, ஆன்ம அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். சொல்லப்போனால், இந்தியாவில் இருந்தபோது பெறாத ஆன்மீக விழிப்புணர்வை, நான் இங்கு வந்த பிறகு, ஒரு இலங்கைத் தமிழரான ஸ்வாமி பரமாத்மானந்தா அவர்களைக் குருவாக ஏற்றபின் தான், அவரது ஞானவேள்வியில் தொடர்ந்து ஈடுபட்டதன் வாயிலாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

வாசகர்களாகிய உங்களிடம் மற்றொரு செய்தியையும் தெரிவிக்க விரும்புகின்றேன். நான் சென்றமுறை எனது ஊரான, புதுச்சேரிக்குச் சென்றபோது, குருவின் உபதேசங்களைத் தொகுத்து நான் எழுதிய 1-‘ஈசாவாஸ்ய உபநிடதம், 2 ‘மரணத்துடன் ஓர் உரையாடல்’ (கடோபநிடதம்) ஆகிய இரண்டு புத்தகங்களையும் எடுத்துச் சென்று, எனது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வராகப் பணியாற்றிய, மதிப்பிற்குரிய திரு.சோ.முருகேசன் அவர்களிடம் அளித்துப் படிக்கும்படி கூறினேன்.

திரு முருகேசன் அவர்கள், அரசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி (காரைக்கால்) முதல்வராக இருந்து, அதன்பின் முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், புதுவை அரசு கல்வித்துறையின் துணை இயக்குனராகவும், ஒரு பிரஞ்சுக் கல்லுாரியின் அதிபராகவும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிரஞ்சு மொழி பாடப்பிரிவின் துறை முதல்வராகவும், புதுவை மாநிலத்தின் மொழி, கலாச்சாரச் செயலகத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆசிகளைப் புத்தாண்டில் பெறுவதற்காகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பேசியபோது அவர், நான் கொடுத்து வந்த இரண்டு புத்தகங்களையும் படித்ததாகவும், மிக அருமையான ஆன்மீக நுால்களான அவை தன்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் கூறினார். அந்த நுாலிலுள்ள விளக்கங்கள் இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் அறிய வேண்டியவை என்று கூறிய அவர், எமது குருவைத் தான் பார்க்க விரும்புவதாகவும், அவரது உபதேசங்களை அருகிலிருந்து கேட்க விரும்புவதாகவும் கூறினார். இதற்காகக் கனடாவிற்கே வரவும் தான் யோசித்ததாகக் கூறியது எனக்கு வியப்பை அளித்தது.

இதை ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், நம் கைகளுக்குள் இருக்கும் கல்லின் மதிப்பு என்னவென்று தெரியாமல் நாம் இருக்கிறோம். அந்தக் கல்லின் மதிப்பை அறிந்தவர் அதனை வைரம் என்று கூறியபின்னாவது. அதைக் கொண்டாடலாமே என்பதற்காகத்தான்.

இந்த எனது கட்டுரைகளை ஆர்வத்துடன் படிக்கத் துவங்கியுள்ள நீங்கள், அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துப்பாருங்கள். நான் சொன்னதன் உண்மை அப்போது உங்களுக்குப் புரியும்.

Click here to view/print this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s