யாம் பெற்ற இன்பம் -3

நாம் அனைவருமே ஈகோவுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஈகோவை ஞானத்தால் நீக்கியபின் வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது தான் உண்மையான வாழ்க்கை. ஞானத்தால் நிரம்பிய வாழ்க்கைஅது. அந்த வாழ்க்கை பிடிபட்டபின், நாம் பெற்றிருக்கும் ஞானமும் தேவையில்லை.

ஹ்யுமன் பீயிங் (Human Being)என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான பொருளைப்பற்றி யாரும் சிந்தித்ததில்லை. ஹ்யுமன் பீயிங் என்றால் மனிதம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். ஹ்யுமன் என்பது ஒரு மனிதனின் உருவம். தோற்றமும், பெயரும் ஹ்யுமன். பீயிங் என்பது என்ன? அது தான் நான். ஹ்யுமனாகிய தோற்றமும், பெயரும் இயங்குவதற்கு, வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளே இருப்பது பீயிங். இந்த பீயிங் இல்லையென்றால், தோற்றம் விழுந்துவிடும். பெயர் மறைந்து விடும். ஹ்யுமன் என்பது உறை. பீயிங் என்பது உயிர்ச்சக்தி. இந்த மனித உறைக்கு உள்ளே இருக்கின்ற ஆற்றல்.  உறைக்குப் பெயர்கள், எண்ணங்கள், வடிவங்கள் எல்லாம் இருக்கின்றன. உறை வடிவமாக இருக்கிறது. சக்தியாக உள்ளிருப்பது, பெயரும் வடிவமுமாகத் தோற்றம் அளிப்பதுடன் இணைந்திருக்கிறது. உயிர் வந்ததால், உடல் வந்தது. ‘நான்’ உறையா? உயிரா? உறைகள் வேறு. உள்ளிருக்கும் நான் வேறு.

ஈகோ லெவல் என்பது எண்ணங்களோடு, எண்ணங்களால் வாழ்வது. உடல், மனம், புத்தியைச் சுற்றி வருகின்ற இந்த எண்ணங்களால் மட்டுமே வாழ்ந்ததால் தான் எனக்கு ஏற்பட்ட இன்ப, துன்பங்கள் என்னைப் பாதித்தன. நான் அனுபவித்த இந்த உலக அனுபவங்களில் ஏதாவது ஒன்று எனது ஆழ் மனதினுள் சென்று என்னைத் திருப்திப்படுத்தி இருக்கின்றதா? என்று சற்றே சிந்தியுங்கள்.

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களைப் பல்வேறு விதங்களில் பெற்றுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வெளியில் சொல்லப்படாத எத்தனையோ நிகழ்ச்சிகள், வெளியில் சொல்ல விரும்பாத எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த அனுபவங்களை நாம் பெற்றிருக்கிறோமே தவிர, அவற்றைப்பற்றிச் சிறிதளவாவது சிந்தித்திருக்கிறோமா? அப்படிச் சிந்தித்துப் பார்த்தவர்களுக்கு அந்த அனுபவங்கள் பாடமாக அமைந்திருக்கும். ஆழமான சிந்தனையாளர்களுக்குத் தான் எண்ண அமைதி ஏற்படும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இப்படி ஆழமாகச் சிந்திக்கக் கற்றிருக்கிறோம்?

நம் மனதில் எழுகின்ற எண்ணங்கள் எல்லாம் பிறரால் நமக்குள் விதைக்கப்பட்டவையே தவிர, நாமே சுயமாகச் சிந்தித்துப் பார்ப்பவை அல்ல. நாமே நமக்குள் எதையாவது ஒன்றைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க முற்படும்போது தான் அதன் உண்மை நமக்குச் சரியாகப் புலப்படும். அடுத்தவரின் கருத்துக்களை மட்டும் பற்றிக்கொண்டிருக்கின்ற வரை நமக்கு உண்மை விளங்காது.

அவரவர் தமது கருத்து மட்டத்திற்கு ஏற்ப ஏதேதோ சொல்லி வைப்பார்கள். காலை முதல் இரவு வரை ஏதேதோ செய்கிறோம். கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றித் தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மைப்பற்றி நமக்காகச் சிந்திப்பதில்லை. சிந்தனையும், செயலும் வெளி உலக ஆரவாரங்களையே பற்றி இருக்கின்றனவேயன்றி, அமைதியைத் தேடுவதில்லை.

மற்றவர்களை விட ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு, அதிலேயே தொடர்ந்து இருப்பவர்கள், தம்முடன் தாம் இருக்கப் பழகியவர்களாக இருக்கின்றனர் என்பது உண்மை. தனிமையை இனிமையாக அனுபவிப்பதன் மூலம், தியானம் செய்வதன் மூலம், தனக்குள்ளே தான் மூழ்கித் தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் இவர்கள் மற்றவர்களை விட மாறுபட்ட விதத்தில் செயல்படுகின்றனர். ஆன்மீகப் பயிற்சி இல்லாதவர்களுக்குத் தனிமை கொடுமையாகத் தெரியும். ஏதேதோ செய்து அந்தத் தனிமையிலிருந்து விடுபடவே விரும்புவர்.

ஆனால், ஆன்மீக சாதகர்கள் தன்னைத்தானே உணர்ந்துகொள்ள முற்படுகின்ற பயிற்சியில் சமயச் சிந்தனைகள், சமுதாயக் கருத்துக்கள், குடும்பப் பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி ஓரம் கட்டிவிட்டுத் தமது குறிக்கோளை உலகியலிலிருந்து விடுவித்து உள்புறமாகத் தன்னை நோக்கித் திருப்பி வைக்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் அறியாமையிலிருந்து விடுபடுவதுடன், தன்னைப் பற்றிய உண்மைகளைக் குருவின் உதவியுடன் படிப்படியாகத் தெரிந்துகொண்டு ஞானம் பெறுகின்றனர்.

நாம் இதுவரை உறையைத்தான் நானாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்று முதல், இந்த உடலை இயங்கச் செய்துகொண்டிருக்கின்ற உயிராகிய உணர்வே நான் என்பதைப் புரிந்து கொள்வோம். எனக்குள் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டிருப்பது எதுவோ அது நான். எண்ணங்கள் இல்லாவிட்டால் மனம் என்னும் அந்த இடம் வெற்றிடமாகி விடுகிறது. வெட்டவெளியாகிவிட்ட அந்தப் பரவெளியில் தான் நான் என்னும் உணர்வு தங்கியிருக்கிறது. அதுதான் உண்மையான நான் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த உயிராற்றல், உடல் வழியாக வெளி உலகத்தோடு உறவாடுகின்றது. இயக்கம் இல்லா நிலையில், தன்னுள் தான் அமைதியாக, ஆனந்தமாக அது இருந்து கொள்கின்றது. இப்படி இருக்கின்ற போது இந்த உயிராற்றல், பெருகி வளர்கின்றது. ஐம்புலன்களின் வழியாக வெளிப்பட்டுச் செயல்படுகின்றபோது சக்திச் செலவழிப்பு ஏற்படுகின்றது. அமைதியாகத் தியானத்தில் அமிழ்கின்ற பொழுது சக்திச்சேமிப்பு நிகழ்கின்றது. இதைத்தான், சித்தன் பரவெளியில் கிடப்பான் என்றும், தில்லை வெளியிலே நடராசர் ஆனந்த நடனம் ஆடுகின்றார் என்றும் கூறியிருக்கின்றனர்.

இதன் உட்பொருள் நானாகிய உயிராற்றல் செயல்படா நிலையில், தனது இயல்பாகிய ஆனந்த அமைதித் தன்மையைப் பெருகச் செய்கின்றது என்பது தான். அமைதி என்பது எண்ணமற்ற நிலையில் வருவது. சாந்தி என்பது நானாகிய உயிராற்றல் என்னில் பரவி நிறைகின்றபோது ஏற்படுவது.

இந்த நிலையில் நாம் தொடர்ந்து இருக்கின்றபோது, நமக்கு என்ன நிகழ்ந்தாலும் அதைச்சுற்றி இந்த சாந்தி நிலை இருக்கும். எதுவுமே என்னைப் பாதிக்காது. வரும், போகும், பாதிக்காது. ஏனெனில் நான் அந்த சாந்தி நிலையில் தோய்ந்திருக்கிறேன். நாம் எந்தச் செயலை செய்தாலும் எண்ணங்களோடு கூடிய நிலையில் தான் செய்கிறோம். இந்த எண்ணங்களை விட்டு விலகி இந்தப் பரவெளி உணர்வில் நின்று செய்யப் பழகினால் எனக்கும் சாந்தி. என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சாந்தி! எண்ணங்கள் நமது சக்தி ஆற்றலுக்கு நாம் போடுகின்ற முடிச்சுக்கள். சாந்தி நிலவ வேண்டும்! ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் உலகிலே! என்ற பாடலின் உட்பொருள் இப்போது புரிகின்றதா? ஆத்ம சக்தி என்னுள் பெருகி நிறைந்தால் எங்கும் சாந்திதான்.

எனது அமைதியை இறைவன் பல விதங்களில் தந்துகொண்டிருக்கிறான். அவற்றில் ஒன்றுதான் நித்திரை. தியானமும் அமைதி நிலை தான். எனது தேவைகள் எதுவென்று நான் நன்றாகப் புரிந்துகொண்டு, அவற்றிற்குரிய கடமைகளை மட்டும் சரியாகச் செய்து முடித்துவிட்டு, எனது சாந்தி நிலையாகிய “பரவெளி ஆத்ம நிலை” க்கு உடனடியாகத் திரும்பிவிட நான் பழக வேண்டும். தேவையில்லாதவற்றையெல்லாம் விரும்பித் தேடி ஓடிக்கொண்டு, எண்ணங்களாக அவற்றைச் சுருட்டி எடுத்து, உருட்டி உருட்டிப் பார்க்கின்ற போது எனது அமைதித் தன்மையை நான் இழக்கின்றேன். எண்ணங்கள் விரிவடைய, விரிவடைய ஆத்மாவின் இயல்பு நிலை கெடுகின்றது. எனவே தான் பூரண சாந்தி நிலைக்கு எண்ணமில்லா வெட்டவெளி நிலை தேவை என்று சொல்கிறேன்.

ஓடி ஓடி ஓய்வில்லாமல் வேலைகளைச் செய்து முடித்துவிட்டுக் களைப்பு மேலிட்டு, அப்பாடா! என்று சென்று அமர்கின்றபோது, ஒரு செயலற்ற நிம்மதித் தன்மை ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? எத்தனையோ ஊர்களுக்குச் சென்று சுற்றித் திரிந்துவிட்டு, நம் வீட்டிற்குத் திரும்பி வந்து நுழைந்தவுடன் ஏற்படுகின்ற ஒரு நிறைவினை அனுபவித்திருக்கிறீர்களா? மாபெரும் கூட்டத்திற்கிடையே இருந்துவிட்டுப் பிறகு தனிமையான, அமைதியான ஓரிடத்தில் சென்று அமர்ந்து பெறுகின்ற நிறைவை, அந்த நிம்மதியை அனுபவித்திருக்கிறீர்களா? நீண்ட துாரம் நடந்து, சுற்றித்திரிந்து, களைத்து ஒரு மர நிழலில் அமர்கின்றபோது உடலில் பரவுகின்ற ஒரு சுகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? இவையெல்லாமே வெட்டவெளி ஆத்மநிலையை (Space Consiousness) நம்மை அறியாமலேயே நாம் அனுபவித்திருக்கும் தருணங்கள்!

இந்த அமைதி நிலையை நாம் தொடர்ந்து அனுபவிக்கின்றபோது தான், ஆத்மா ஈகோவாக வெளிப்படாமல், தானே தன் இயல்புடன் என்னிலிருந்து வெளிப்படத் துவங்கும். இந்நிலையை அடைய முதலில் சமய சம்பிரதாய முறைகள், பிழையான கருத்துத் தொகுப்புக்கள், யாரோ சொல்லித் தந்தவற்றில் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டிவிட வேண்டும். சிந்தையில் எந்தவித அடைப்பும் இருக்கக்கூடாது. வெட்டவெளி தான் இருக்க வேண்டும்.

எனவே கடந்த காலத்தைத் தேடாமல், எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணாமல், நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால், உள்ளே இருக்கின்ற உயிர்ச்சக்தி தானாக எழும்பி வந்து செயல்படும். அது நம் குறுக்கீடு இல்லாமல் தானாகத் தனது திட்டத்தை நிறைவேற்றும். வெற்றி ஏற்படுவதும், தோல்வி ஏற்படுவதும் ஈகோவிற்குத் தானே தவிர, ஆத்மாவின் அமைதி, விளைவுகளால் கெடாது.

எதை முன்னிட்டும் உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்போது, அந்த வெட்டவெளி, உள்ளே மேலும் விரிவடையும். இதைப் பயிலுவதற்காகத் தான் ஆன்மீக சாதகர்கள் தியானம் செய்யும் முன் மூச்சுப் பயிற்சி செய்வது. இந்த மூச்சுப் பயிற்சியில், மூச்சு விடுவதில் முழு கவனத்தையும் செலுத்தும்போது எண்ணங்கள் எழா நிலை ஏற்படும். இதே நிலையில் தியானத்தில் மூழ்குகின்றபோது அந்தத் தியானம் முழுமையான சாந்தியைத் தரும். எண்ணமில்லா நிலையே சாந்தி நிலை. சமாதி நிலை.

எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் எழுந்துகொண்டிருக்கும் வரை உள்ளே ஈகோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருள். எதிர்மறை எண்ணங்கள் எழவில்லையென்றால், ஈகோ இல்லை. எனக்குள் எழுகின்ற எண்ணத் தொகுப்புக்களை, எண்ணத்தால் ஆழமாக ஆராய்ந்து தெளிவு படுத்தும் ஓர் எண்ணத்திற்குத் தான் ஞானம் என்று பெயர். நல்லறிவிற்கு ஞானம் என்று பெயர். எனக்குள் எழும் எண்ணங்களைப் பற்றி, நானே சரி பிழை பார்த்து ஆராய்ந்து அறிவது ஞானம்.
“தெளிந்த நல் அறிவு வேண்டும்” – பாரதியார்

Click here to view/print this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s