அன்பெனும் மலர் ஏந்தி

வணக்கம்!

Anbenum malar enthi

தரணியெங்கும் பரவிச் சிறந்திருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். செம்மொழியால் ஒன்றுபட்ட தமிழருக்குச் சிரம் தாழ்ந்த வணக்கம். அன்புள்ளம் கொண்ட அனைவர்க்கும் எனது அன்பான வணக்கம். மூன்றாவது கதை நூலுடன் இன்று வாசகர்களாகிய உங்கள் முன் மீண்டும் வணங்கி நிற்கின்றேன்.

எனது முதல் சிறுகதை நூலான “புதிய பூவிது பூத்தது” தங்களைப்போன்ற தமிழ் வாசகர்களின் நல்ஆதரவால் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றது. அதை நீங்கள் வரவேற்ற தெம்பில் “கனடாவில் பூத்த கதை மலர்கள்” என்னும் எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பினைத் தங்கள் கரங்களில் சேர்த்தேன். உங்கள் ஆதரவும், வரவேற்பும் மேலும் என்னை ஊக்கப்படுத்தியது. இந்த ஆண்டு மீண்டும் ஒரு கதை நூலை உருவாக்கி வழங்குவதில் மனம் நிறைந்து மகிழ்கின்றேன். இதற்குக் காரணம், இந்தக் கதைநூல் சிறுகதைத் தொகுப்பல்ல. இரண்டு குறுநாவல்களும், ஒரு முழு நாவலும் இணைந்த நெடுங்கதைத் தொகுப்பு. சொல்லப்போனால் இது எனது புதிய முயற்சி.

இதில் எழுதப்பட்டுள்ள மூன்று நாவல்களுமே மூன்று கதைக் களங்களைக் கொண்டவை. முதல் கதையான “அன்பெனும் மலர் ஏந்தி”, தமிழ்நாட்டின் பழம் பெரும் பெருமை வாயந்த ‘கலைமகள்” இதழ், 2002ம் ஆண்டு அமரர் ராமரத்தினம் அறக்கட்டளை சார்பில் நடத்திய குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசினை எனக்குப் பெற்றுத் தந்ந சிறப்பைப் பெற்றது. அன்பின் உயர்வை மிக ஆழமாகவெளிப்படுத்துகின்ற கதை இது. இரண்டாவது- ‘துன்பம் யாவுமே இன்பமாகுமே” என்னும் குறுநாவல், எந்தப் பத்திரிகையிலும் வெளியானதல்ல. உலகெங்கும் தற்கொலை எண்ணம் தலைதுhக்கி வளர்வதைக் கவனித்த வேதனையால் எழுந்த கதை அது. இந்தியாவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்ற செய்தியை ஒரு நாள் கேட்டபோது, அந்தக் கோழைத்தனத்தை எதிர்த்துப் போராட வேண்டிய துணிவை உருவாக்க என்னுள் எழுச்சி பெற்ற கதையே அது. மூன்றாவது நெடிய கதை முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான கதையாகும். ‘கங்கா ஒரு காவியம்” என்னும் அந்த நீணட கதை, பெண்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாய் திறவாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையும், மெல்லியலாராகப் பார்க்கப்படுகின்ற பெண்கள் தான் உண்மையில் குடும்ப பாரத்தை முழுவதுமாகத் தாங்கி நிற்பவர்கள்’ அவர்களின் பக்க பலத்தால்தான் ஆண்கள் தமது பங்கினை ஒரளவிற்குச் சரியாகச் செய்ய முடிகிறது என்ற உண்மையையும் ஒரு வாழ்க்கை வரலாறாக விவரிக்கச் செய்யப்பட்ட முயற்சி.

இந்த மூன்று பெருங்கதைகளுமே பெண்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டவை என்பதை மட்டும் தெரிவித்துக்கொண்டு, மற்றவற்றை வாசகர்களாகிய உங்களின் நேரடி ரசனைக்கு விட்டுவிடுகிறேன்.

இந்தக் கதை தொகுப்பினை நீங்கள் படிப்பதோடு மட்டுமின்றி, மற்றவர் படிப்பதற்கும் உரிய சிபாரிசினைச் செய்ய வேண்டுமேன நட்புடன் கேட்டுக்கொண்டு, மீண்டும் உங்களைக் கரம் கூப்பி வணங்குகிறேன்.

என்றும் நட்புடன்,
விஜயா

அன்பெனும் மலர் ஏந்தி – ஆய்வுரை

ஆய்வுரை: கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

அன்பெனும் மலர் ஏந்தி – ஆய்வுரை 2

ஆய்வுரை: கவிஞர். புகாரி

 

அன்பெனும் மலர் ஏந்தி

துன்பம் யாவுமே இன்பமாகுமே

Advertisements