அக மாற்றம் தேவை

agamattram_coverவாழ்க்கையில் நிகழ்கின்ற எல்லாமே ஏதாவது ஒரு வகையில் மனதைப் பாதிப்பதாகவே இருக்கின்றன. வருகின்ற அனைத்தையும் எதிர்கொள்ள மனம்தான் எதிர்கொள்கின்றது. மனம் தான் ஏற்கின்றது. மனம் தான் எதிரொலிக்கின்றது. மனம் அசைவுதற்கேற்பப் புலன்கள் செயல்படுகின்றன. இதைத்தான் மகாகவி பாரதியார் ‘அசைவறு மனம் கேட்டேன்’ என்று பாடினார். எது ஒன்றாலும் அசைக்கப்படமுடியாத மனம் தான் இன்று மனிதனுக்குத் தேவை. இதற்கு, மனம் என்றால் என்ன? மனதின் தன்மை என்ன? அதன் இயல்பு யாது? மனதை நாம் எப்படிக் கையாள்வது? போன்ற விபரங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். அப்படி ஆராய்ந்து தெளிந்த பின் தான் மனதின் ஆட்டத்திற்கு நாம் ஆடாமல் நம் இயக்கத்திற்கு மனம் இசைந்து வரக்கூடிய நிலையை நம்முள் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மனம் நாமல்ல, மனம் என்பது ஒரு கருவி, மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் தான் வார்த்தைகளாக, செயல்களாக உருவெடுக்கின்றன. எண்ணம் சரியாக அமைக்கப்பட்டால், வார்த்தையோ, செயலோ தவறாக வெளிப்படாது. மனம் சரியான எண்ணங்களைக் கொண்டதாக அமைந்துவிடும்போது, பேசுகின்ற வார்த்தைகளும், செய்கின்ற செயல்களும் சரியாக அமையும். ஆனால் நமக்குள் எழும் எண்ணங்களோ நாம் சுயமாகச் சிந்தித்துச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிப்படுபவை அல்ல. பிறந்ததிலிருந்து நம் பெற்றோர், குடும்பம், கல்விக்கூடம், சமுதாயம் எனப் பிறரிடமிருந்து நாம் பெற்ற கருத்துக்கள் தான், ஆராயப்படாத எண்ணங்களாக நமக்குள் புதைந்திருக்கின்றன. அவற்றை சரி பிழை பார்க்காமலேயே நாம் வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். மனதை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். இதற்கு நாம் முயல வேண்டும்.

இதற்காகத்தான், இந்தச் சிந்தனையை நாம் ஒவ்வொருவரும் பெற்று அதனை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்னுள் குடி கொண்டிருக்கும் ஆத்ம சக்தி, என்னைக் கருவியாக்கி, ‘அக மாற்றம் தேவை’ என்னும் இந்த எளிய நூலை உருவாக்கியுள்ளது. என்னுள் இந்த விதையை ஊன்றி, என்னைச் சிந்திக்கத் தூண்டிய  எமது குரு ஸ்வாமி பரமாத்மானந்தா அவர்கள், தமது ஆன்மீக ஞான வேள்வியில் வெளிப்படுத்திய அரிய கருத்துக்களே எனது சிந்தனை ஓட்டத்திற்கு அடித்தளம் அமைத்துத் தந்தன என்பதை நன்றியுடன் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பல கட்டுரைகள் கனடா யோக வேதாந்த நிறுவனத்தின் சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் “ஒளி மயம்” ஆன்மீக மாத இதழில் சக்தி என்ற புனைப்பெயரில் வெளிவந்திருக்கிறது.

வாழ்க்கையில் உனக்கு என்ன தேவை? என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும். இந்த நிம்மதி நிரந்தரமாக நம்மில் தங்கியிருக்க வேண்டுமென்றால், அதற்கு நிச்சயம் இந்த ‘அக மாற்றம் தேவை’ என்பது இதனைப் படிப்பவர்களுக்கு எளிதாய் புரியும்.

அகமாற்றம்-தேவை-1 :PDF

அகமாற்றம்-தேவை-2: PDF

அகமாற்றம்-தேவை-3 – PDF

அகமாற்றம்-தேவை-4 : PDF

அகமாற்றம்-தேவை-5 :PDF

அக-மாற்றம்-தேவை – 6 :PDF

அக-மாற்றம்-தேவை-7 :PDF