அஹம் – 45

எந்த ஒருவன், நான் இந்த உடலல்ல; மனமல்ல; புத்தியல்ல; அகங்காரமல்ல; நான்-எனது என்ற அறியாமையும் எனக்குக் கிடையாது, இங்குக் காணப்படுபவை, பெறப்படுபவை எல்லாம் பிரம்மமேயாகும்! போன்ற வேத சாஸ்திர உண்மைகளைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்து, தன் சிரத்தையின் வழியாக எப்பொழுது அந்த உண்மையை அனுபவம் ஆக்கிக் கொள்கிறானோ, அப்போதே அவனிடமிருந்து மாயை விலகி விடுகிறது. பற்று அற்றுப் போய்விடுகிறது.

அந்த நிலையில் அவன் இந்தப் பிறவியிலேயே மறுபிறவி எடுத்தவன் ஆகிவிடுகிறான். பிரம்மம் சத்தியம்! ஜகத் மித்யா! என்று உணர்ந்து, சடப்பொருளான தன் தேகத்தை, அது சம்பந்தப்பட்டவற்றைத் தன்னிலிருந்து ஒதுக்கி விடுகிறான். அப்பொழுது ஜீவன் என்ற நிலையிலிருந்து நீங்கி அவனது உள்ளே ஒளிந்திருக்கும் பிரம்ம ஆற்றல் வெளிப்பட்டு விடுவதால், அவனது பிறவிக்குரிய தோஷங்கள் விலகி, பிராரப்த கர்மா உள்ளிட்ட மூன்று கர்மாக்களுமே அவனுக்கு இல்லாமற் போய்விடுகின்றன.

இப்படிப்பட்டவர்கள் மனிதப் பிறவி என்ற நிலையிலிருந்து விடுபட்டு, ஜீவன் முக்தர்கள் ஆகிவிடுகின்றனர். அதன்பின் அவர்கள் கர்மாவின் பிடியிலிருந்து விலகி பிரம்மத்தின் கருவியாகி மனித சமுதாயத்திற்கு ஞான ஒளிப் பாதையைக் காட்டுகின்ற வழிகாட்டிகளாக இயங்குகிறார்கள். மனித சரீரத்தில் இருந்தாலும்  பிரம்மமாகச் செயல்படும் இவர்களை ஞானியர் என்று மக்கள் போற்றுகின்றனர்.

நான் இந்த உடல்; நான் மனிதன்; நான் இந்த ஜாதி; நான் இந்த குடும்பம் என்று சாதாரண மனிதன் எதையெல்லாம் நிச்சயமாகக் கருதுகின்றானோ அதுபோலவே ஜீவன் முக்தனும், நான் இந்த உடலில்லை; அழிகின்றதான எதுவுமே நான் இல்லை. வாழ்க்கையில் காணப்படுகின்ற எதுவுமே என்னைப் பந்தப்படுத்துவதில்லை. நான் இந்த உடலில் உள்ளே ஒளிரும் உயிர் ஆவேன்; அந்தர்யாமியாக அனைத்து உயிர்களாகவும் நிறைந்திருப்பது எதுவோ அதன் சிறுதுளி நானாகவும் இருக்கிறது; என்று உறுதியாக நினைக்கிறான். சாதாரண மனித மனப்போக்கும்; ஜீவன் முக்தர்களாக வாழ்பவர்கள் தங்களை நினைக்கின்ற விதமும் எப்படி என்பது விளங்குகின்றதா?

ஜீவன் முக்தன் என்பது உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவன் என்ற பொருளைக் கொண்டது. இந்த நிலை ஏற்பட்ட பிறகு மூன்று விதக் கர்மாக்களும் அழிந்து போய்விடும். அனைத்தையுமே விட்டவர்களான இவர்கள் உள்ளம் மலர்ந்து எப்பொழுதும் அன்பும், கருணையும், பிடிப்பற்றவர்களுமாக இருப்பார்கள். பிரம்மத்தை அறிந்தவராகவும், சாஸ்திர ஞானம் நிறைந்தவராகவும் திகழ்கின்ற ஒரு சத் குருவின் உபதேசத்தால் பக்குவப்பட்ட ஜீவன், முக்தி நிலையை அடைய முடியும்.

இந்த உலகில் உயிரோடு வாழ்கின்ற வரை பிரம்மமென உணர்ந்ததால் வரும் பேரானந்தத்தையும், தான் வேறு, இந்த உலகம் வேறு என்னும் பேதம் அறிந்ததால் ஏற்படும் அமைதியையும் ஜீவன் முக்தன் அனுபவிக்கிறான். சமதர்சனம் என்ற இந்த சமநோக்கு ஒருவனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் அனைத்தையும் ஆத்மாவாகவே பார்ப்பான். அனைத்தையும் பிரம்மமாகவே பார்க்கின்ற அந்நிலையில் அவனே பிரம்மமாகத் தன்னை உணர முடியும்.

இந்த ஞானத்தை ஒருமுறை பெற்றுவிட்டால் பிறகு அது நீங்காது; நிலைபெற்று விடும். தன்னோடு பழகுகின்ற அனைவரையும், அதுவும் பிரம்மமே! என்று சமமாக ஒருவன் பார்க்கின்றபோது அவன் ஜீவன் முக்தன் ஆகிறான். மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும், பறவைகளையும், புழு பூச்சிகளையும் கூடப் பிரம்மமாகப் பார்க்கின்ற நிலை நம்மில் ஏற்பட வேண்டும்.

எல்லாம் ஒன்று என்ற எண்ணம் சம நோக்கை உருவாக்கும். எதிலிருந்து எல்லாப் பொருள்களும் தோன்றினவோ, எதனால் அவை அனைத்தும் காப்பாற்றப்படுகின்றனவோ, அதனிடமே அவை மீண்டும் சென்று முழுமை அடைகின்றன. இந்த உண்மை அறியப்படும் வரை புனரபி மரணம்; புனரபி ஜனனம்! என்ற நிலைதான்.

எப்படி ஆகாயம் எதிலும் சம்பந்தப்படாமல் உள்ளதோ, அதேபோல் ஆத்மாவும் அனைத்தையும் கடந்தது. எதனோடும் தொடர்பில்லாதது. இந்த நிலையை அடைந்த ஜீவன் முக்தன், நான் செய்கிறேன் என்ற உணர்வோடு எந்த காரியத்தையும் செய்வதில்லை. ஆகவே செயலின் விளைவு எந்தவிதத்திலும் அவனைப் பற்றுவதில்லை. அதாவது நான் செய்கிறேன்! என்று அவன் எதையும் கருதுவதில்லை. தன்னை ஒரு கருவியாக நினைத்தே அவன் செயல்படுகிறான்.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!” என்ற திருக்குறள் இந்த ஜீவன் முக்தர்களையே “நல்லார்” என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றது.

நமது பாரத தேசம் இப்படிப்பட்ட நல்லார்களையே தொடர்ந்து அதிக அளவில் பெற்றிருக்கும் புண்ணிய பூமியாகத் திகழ்ந்து வருகிறது. மேல்மட்டத்தில் ஊழலும், அக்கிரமங்களும், அராஜகச் செயல்களும் நிறைந்த நாடாகக் காட்சியளித்தாலும் கூட, பாரதத்தின் வேர்த்தன்மை பிரம்மத் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. எப்படி நுரைகளோடு கூடிய அலைப்பகுதி அழுக்கே வடிவமாகக் காட்சியளிக்கிறதோ அதுபோல்தான் இன்றைய பாரதத்தின் இழிநிலைக் காட்சிகள். ஆனால் ஆழமான சமுத்திரத்தில் முத்துக்களும், பவளங்களும், நவரத்தினங்களும் புதைந்து கிடப்பதைப் போல் ஆங்காங்கு ஜீவன் முக்த புருஷர்கள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தன்னைப் பிரகாசப்படுத்தித் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துபவர்களாகத் திகழ்கிறார்கள்.

இந்த உண்மைகளை அறிய விடாமல் தடுப்பது மாயையின் வேலை. மாயை என்பது ஒரு திரை. அது ஒரு ஜீவனை முக்தி அடைய விடாமல் மறைக்கின்ற தடை. இதுவும் பிரம்ம விளையாட்டே. சனாதன தர்மம் சத்தியத்தைப் பற்றிப் பேசுவதால் இதற்கு ஒரு நாளும் அழிவில்லை. இந்து மதம் என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துதான் அனைத்து மதக் கொள்கைகளும் அமைந்திருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் விளங்கும். சமுதாயமும், மதங்களும் மேம்போக்காக எதெதையோ பிதற்றிக் கொண்டிருந்தாலும், எல்லாம் ஒன்று என்ற அற்புத சத்தியத்திற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.

இப்படி அடி ஆழம் வரை போய்ப் பார்க்கத் தெரியாததால் தான் ஞானம் பெற்றவர்கள் கூடத் தத்தம் அறிவு மட்டத்திற்கு ஏற்ப, அதாவது தன்னுள்ளே எதுவரை மூழ்க முடிந்ததோ அதுவரை மூழ்கி அதில் பெற்றதை வைத்து எடுத்துரைக்கின்றனர். யார் உண்மையிலேயே பிரம்மம் சத்தியம்; இந்த உலகம் அசத்தியம் என்பதை உணர்ந்து விடுகிறார்களோ அவர்கள் மௌனமாகி விடுகின்றனர். ஏனெனில், அவர்கள் அந்த நிலையில் – “இல்லாமல் போய்விடுகிறார்கள்”.! புரிகிறதா?

இந்த அனுபவத்தை உணர்த்துவதற்காகத் தான், ஸ்ரீ ஆதிசங்கரர் தமது ஒப்பற்ற அத்வைத சித்தாந்தத்தை வேதத்தின் அடிப்படையில் நிறுவினார்.அதோடு மட்டுமின்றி மக்களின் பரிணாம வளர்ச்சிக்குத் தகுந்தபடி வழிபாட்டுப் படி முறைகளை உருவாக்கி பாரதத்தை ஒன்று படுத்தி வைத்தார். சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் அளவற்றவை. பிரம்மமே வெளிப்பட்டு அனைத்தையும் சங்கரர் உருவில் இருந்து நெறிப்படுத்தி இருக்கிறது என்று துணிந்து கூறலாம்.

அப்படிப்பட்ட பகவத்பாதர், தமது இந்த அபரோக்ஷ அனுபூதி யில் மிக மிக அற்புதமான விதத்தில் ஜீவனுக்குப் படிப்படியாக ஒளிப் பாதையைக் காட்டி அழைத்துச் செல்கிறார். நடைமுறையில், ஞானியானாலும் பிராரப்தம் உண்டு! என்றே பெரும்பாலும் சொல்வது வழக்கம். உலகம் உண்மை என்றும் ஒரு சித்தாந்தம் நிலைபெற்றிருக்கிறது. இறைவன் வேறு; ஜீவன் வேறு – என்றும்  சொல்லப்படுகிறது. இங்கு ஸ்ரீசங்கரர் அடுத்து வரும் பாடல்களில், ஞானிக்குப் பிராரப்தம் கிடையாது – என்பதை விளக்குகின்றார்.

90. ஆத்ம ஞானம் ஏற்பட்ட போதிலும் பிராரப்தம் விடுவதில்லை என்று சொல்லப்படுவது வழக்கம். ஆனால் அது சாஸ்திரப் பிரமாணத்தால் இப்போது, அவ்வாறு இல்லை! என்று மறுக்க படுகிறது.

91. ஆத்ம தத்துவ ஞானமேற்பட்ட பிறகு சரீரம் போன்றவை பொய் என்பது ஞானிக்குத் தெரிந்து விடுகின்ற படியால், எப்படி ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பிறகு, தான் கண்ட கனவு பொய் என்பது தெரிந்துவிடுகிறதோ, அவ்வாறு ஞானம் அடைந்த பிறகு தேகம் சம்பந்தப்பட்ட கர்மாக்களும் ஞானிக்கு இல்லை என சாஸ்திரம்   சொல்கின்றது.

92. முன்னொரு பிறவியில் செய்யப்பட்ட கர்மாவே ஒரு ஜீவனுக்குப் பிராரப்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஞானியான புருஷனுக்கு முன் ஜன்மமென்பது கிடையாததால் அவனுக்குப் பிராரப்தமும்  எப்படியும் இராது.

93. எப்படி கனவில் காணப்படும் சரீரம் (நான்) என்பது கற்பனையோ, அதுபோல உண்மையாய் தெரியும் இந்த சரீரமும் (நானும்) பொய்த் தோற்றமே ஆகும். இந்த தேகம் பொய் என்று அறிந்து விட்டால் பிறகு பிறவி எப்படி வரும்? பிறவியே இல்லை என்பது புரிந்த பிறகு நான் (அகம்) என்பது ஏது?

94. குடத்திற்கு எப்படி மண் உபாதான (அடிப்படை)  காரணமோ அப்படியே பிரபஞ்சத்திற்கு உபாதான காரணம் அறியாமை என்று உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அறியாமை அழிந்த பிறகு பிரபஞ்சம் எங்கே இருக்க முடியும்?

95. எப்படி இருட்டில் கிடக்கும் கயிறைப் பாம்பு என்று கற்பனையாக நினைத்துக் கொண்டு ஒருவன் பயந்து நடுங்குகிறானோ அதேமாதிரி, சத்தியமாயுள்ள பிரம்மத்தை அறிந்து கொள்ளாமல், மோகம் அடைந்த புத்தியோடு வாழ்பவன் ஜகத்தைப் பார்க்கிறான்.

96. இது கயிறு என்பது தெரிந்துவிட்டால் பிறகு பாம்பு என்ற கற்பனை இருக்காது. அப்படியே இந்தப் பிரபஞ்சத்திற்கு அடிப்படைக் காரணமாயுள்ள பிரம்மம் அறியப்பட்டு விட்டால்,  ஜகத் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.

97.  இந்த சரீரம் என்பதும் பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கும் ஒன்றே ஆதலால் இதற்குரியதான பிராரப்தம் என்று சொல்லப்படுகின்ற கர்மா எப்படி இருக்கும்? ஆத்ம ஞானம் அடையாத ஜனங்களுக்குச் சொல்வதற்காகத்த தான் வேதம்,  பிராரப்தத்தைப்பற்றி, அது இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது.

98. “மேலானதும், கீழானதுமான (காரணமாகவும், காரியமாகவும் உள்ள) எல்லாப் பொருள்களாகவும் இருக்கும் பிரம்மத்தை நான் என்று அறிந்து விட்டால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால், அவனுடைய கர்மாக்கள் நசித்து விடும்”. என்று வேதம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

99. இந்த உண்மையை அறியாதவர்கள் பிடிவாதமாக ஞானிகளுக்கும் பிராரப்தம் உண்டு என்று சொல்வார்களேயானால் அப்பொழுது இரண்டு வித அனர்த்தங்கள் வந்து சேரும். வேதாந்த உண்மையைக் கைவிட்டதாக அது ஆகிவிடும்.

ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – 19

(ஈழத்து வேதாந்தி ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதியின் உபதேச அடிப்படையில்)

படைப்பின் நோக்கம், பிரம்ம விருப்பம்! என்ன? ஏதோ புதிர்போல் தோன்றுகிறதா? பரபரவென்று வாசிக்காமல், நிதானமாக வாசித்தால் புதிர்விளங்கும். எல்லாமாய்ப் பரந்து விரிந்து, இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒன்று, பிரம்மம் என்ற பெயரால் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த அளவிடமுடியாத பேராற்றல் கொண்ட ஏதோ ஒன்று, தன்னுடைய விருப்பத்தால் தானே பிரபஞ்சமாகப் பேரண்டமாக வெளிப்பட்டு, ஈரேழு பதினான்கு உலகங்களையும் அதற்கப்பால் உள்ளவற்றையும் இடைவிடாமல் இயக்கிக்கொண்டிருக்கின்றது என வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. விஞ்ஞானமும் இப்போது இந்த உண்மையை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றது. அனைத்திற்கும் மேலான ஒரு சக்திதான் இந்தப் பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணம் என்பது புரிந்துகொள்ளப்பட்ட ஓர்உண்மையாகிவிட்டது.

இந்தப் பிரம்மம் என்னும் பேராற்றல் அசைவற்று இருந்துகொண்டு, பிரபஞ்சமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியே நாம் வசிக்கின்ற பூமி அல்லது இந்த உலகம். இவ்வுலகத்தில் இருக்கின்ற அனைத்தும் படைப்புக்கள் என்று அழைக்கப்படுபவை. படைப்புக்களை ஆராய்ந்த விஞ்ஞானம், பொருள்கள் அனைத்துமே கூட்டுக்கலவை என்றது. கனிமம், தனிமம், துகள், அணு, மூலம் என இதனை வகைப்படுத்தியது.

இதேவித அமைப்பில்தான் மனித உடல் தத்துவமும் அமைந்திருக்கிறது. மூலம் அல்லது பிரம்மம் அணு அளவில் கருவாக ஆணின் விதைப்பைக்குள் புகுந்து ஒளித் துகளாகப் பெண்ணின் கருப்பைக்குள் நுழைகிறது. அங்கு ஐம்பூதச் சேர்க்கையால் குழந்தையாகப் பருவுடலைப் பெறுகின்றது. அப்பரு உடலின்; உள்ளே சூட்சுமமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப் பலப்பல உருப்பெறுகின்றன. இவற்றிற்குள் முன்ஜன்மக் கர்மப் பதிவும் ஒரு புள்ளியாக இடம்பெறுகின்றது.

ஒரு குழந்தை பிறக்கும்போது, அது பிரம்ம ஸ்வரூபமாக மட்டுமே இருக்கிறது. பிறந்த உடனேயே அதற்குப் புத்தி இயங்குவதில்லை. எண்ணங்கள் எழுவதில்லை. நான் என்பது அதற்குத் தெரியாது. அதாவது பிறந்த குழந்தைக்குத் தன்னைத் தெரியாது. ஆணா, பெண்ணா? என் பெயர்என்ன? என்பன போன்ற எதையும் அறியாத நிலை. ஐம்புலன்களும், அவற்றின் செயல்பாடுகளும் ஒரு குழந்தைக்குத் தெரியாது. உடல் உணர்வு அதற்கு இல்லை. பொருள்களையும் உறவுகளையும் குழந்தையால் அறிய முடியாது. உலகம் என்பது என்ன என்பதும் அதற்குத் தெரியாது. பிறந்த பின்பும் பிரம்ம நிலை. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கிறோம்.

காலப்போக்கில், ஒரு குழந்தையின் வளர்ச்சி அதனை விரிவடையச் செய்கிறது. இப்படி இந்தப் பிறப்பாகிய உடலுக்குள் மூலமாய் நின்று இயங்கும் பிரம்மம், புத்தியாக வெளிப்பட்டு வெளி விவகாரங்களை அறியத் துவங்குகிறது. தன்னை இந்த உடலாக அறிந்து நான் என்ற உணர்வில் செயல்படப் பழகுகின்றது. மனமென்னும் கருவி கர்மாவால் இயங்கத் துவங்கிவிடுகின்றது. எண்ணங்களால் விரிகின்ற மனம் ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப ஐம்புலன்களின் வழியாக வெளிப்பட்டு உலகத்தில் பாய்கிறது.

மூலமாகிய பிரம்மமே ஆத்மசக்தியாக அகத்தில் இருந்துகொண்டு புத்தியாக, மனமாக, அகங்காரமாகப் புலன்களின் வழியாக உறவுகளோடும், பொருள்களோடும் தனது தொடர்புகளை வளர்த்துக்கொள்கிறது. இப்படி ஏற்படுத்திக்கொள்கின்ற தொடர்புகளால் ஏற்படுவது சுகம் என்று நினைத்துத் துன்பத்தையும், ஏக்கத்தையும், பொறுப்புகளையும் பரிசாகப் பெறுகின்றது. அறியாமை என்னும் ஈகோவினால் செயல்பட்டுக் கர்மாவை அதிகரித்துக் கொள்கிறது.

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் என மூலத்தில் இருக்கும் ஆத்ம சக்தி, வெளிப்புறமாகப் புலன்களின் வழியே வெளிப்பட்டுப் பொருள்களையும், உறவுகளையும், தேவைகளையும் வளர்த்துக்கொள்கிறது. நான், எனது, என் சுகம் என அறியாமையுடன் செயல்படுகின்றது. போகப் போகப் பொருள்களும், உறவுகளும் துன்பத்தையும், இழப்பையும் தருகின்றன. சுமையாகவும், வெறுப்பாகவும் மாறிவிடுகின்றன.

முதுமை வந்து சூழ்கிறது. ஐம்புலன்களும் ஒவ்வொன்றாகச் செயல் இழக்கின்றன. ஆசை குறைகிறது. ஆன்ம விசாரம் தொடங்குகிறது. புலன்களும், மனமும் அடங்கி ஆன்ம சாதனையால் புத்திப் பிரகாசம் ஏற்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் முன்னேறிக் குருவை அடைந்து, உபதேசம் பெறத் துவங்கிய பின்புதான் வாழ்வின் உண்மைத் தன்மை என்னவென்று பிறவிக்கு விளங்குகின்றது. குரு, அந்த ஜீவனுக்குத் தான் யார்? தனது மூலம் எது? உலகம் என்பது என்ன? பொருள்களின் உண்மைத் தன்மை யாது? போன்ற அனைத்தையும் விளக்குகின்றார்.

ஆத்மத் தேடலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜீவனுக்கு இதுவரை தான் அறியாதிருந்த பல விஷயங்கள் நன்றாக விளங்குகின்றன. இது புரிந்தவுடன் இதுவரை கண், காது, மூக்கு, நாக்கு, உடல் என்னும் ஐம்புலன்களையும் வெளி விவகாரங்களில் ஈடுபடுத்தி வந்த பழக்கத்தைத் தடுத்து நிறுத்துகிறான். உலக இன்பங்களில் தங்கியிருந்த ஐம்புலன்களை விலக்கி, உள்புறமாகக் கவனத்தைத் திருப்புகிறான். கட்டுப்பாடின்றித் திரிந்த மனதைப் பக்தியிலும், மந்திரப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தி அடக்குகின்றான். குருவின் உபதேசம் இதற்கு உதவுகின்றது.

குருவின் அயராத அரும் முயற்சியால், அவரது வழிகாட்டுதலால் ஆத்ம சாதனைகளில் தானாகவே மனம் அடங்கி ஈடுபடுகின்றது. இந்த உடலே நான்; என்ற முனைப்பில் செயல்பட்ட அகங்காரத்தை, ‘நான் பிரம்மம்’ என்ற உணர்விற்குள் செலுத்தப் பழகுகிறான். இப் பயிற்சியினால் புத்திக்குத் தெளிவு உண்டாகிறது. இதுவரை அதுவா, இதுவா என்று வக்கிரமாகக் கர்மாவால் இயங்கிவந்த புத்தி இப்போது உலக விவகாரங்களைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்காமல் நிலையான பிரம்ம ஒளியில் பிரகாசிக்கின்றது. இதற்குத் தனிமையும், தியானமும் உதவுகின்றன.

தன்னை யாரென்று அறியாத நிலையில் ‘உடலே நான்’ என நினைத்து வெளிப்பட்டுப் பட்டமென்றும், பதவியென்றும், புகழென்றும், குடும்பமென்றும், பணமென்றும் ஓடித் திரிந்த பிரம்ம சக்தி, தான் பட்ட கஷ்ட நஷ்டங்களால் அல்லது பூர்வஜன்ம மிதமிஞ்சிய புண்ணிய பலத்தினால் தனக்குள் தானாகத் தன்னை அறிந்து, படிப்படியாக அடங்குகிறது. இவ்வாறு வெளிப்பட்டுத் திரிந்த உயிராற்றலை உட்புறமாகச் சுருக்கி, இருந்த இடத்திலேயே, அதாவது மூலத்திலேயே நிலைபெறச் செய்தலே ஆத்ம அனுபூதி ஆகும்.

இந்த ஆத்ம அனுபூதி என்ற உண்மையான தன்னில் தான் அடங்கியிருக்கின்ற நிலையை இந்தப் பிறவி அடைவதற்கு, முதலில் உலக சுகங்கள் என்னும் பற்றுக்களிலிருந்து மனத்தளவில் விடுபடவேண்டும். ஐம்புலன்களைப் புறத்திலிருந்து அகத்திற்குத் திருப்பி ஆன்ம சாதனையில் ஈடுபடச் செய்ய வேண்டும். மனத்தில் எண்ணங்களே இல்லாமற் செய்ய தியானம் பழக வேண்டும். உடலை அடக்க யோகா; மனதை அடக்க மந்திரம்; புத்தியைப் பிரகாசிக்கச் செய்யத் தியானம்! இப்படி முழு முயற்சியுடன் இந்தப் பாதை வழியே குருவின் வழிகாட்டுதலுடன் சென்றால் புத்தி, ஆத்மாவைத் ‘தான்’ என அறிந்துகொண்டு அதாவது உண்மையான நான் என்பது இந்த உடலோ பிராணனோ, மனமோ, புத்தியோ கிடையாது. இவை எல்லாவற்றையும் இயக்குகின்ற உயிர்ச்சக்தி என்னும் ஆத்மாவே நான் என்னும் உண்மை தெளிவாகப் புலப்படும்.

உலக இன்பங்களைத் தேடி ஓடிய உயிர்ச் சக்தி அங்கு இனிச் செலவழியாது; மாறாக சேமிக்கப்படும். அதனால் ஆத்ம பிரகாசம் ஏற்படும். இந்த நிலையில் ஆத்ம சக்தி நமக்குள் ஓங்கும். பிறகு மூலம் மட்டுமே இருக்கும். அந்த ஜீவன் இனிப் பிரம்மம். அதற்கு இனி பேதம் இல்லை. எல்லாமே பிரம்மம். பிரம்மம் மட்டுமே! புறம்பாக வேறொன்றுமே இருக்காது. அமைதி; ஆனந்தம்; நிறைவு; நிலைகுலையாத நிம்மதி! அவ்வளவுதான்! ஆத்ம அனுபூதி என்பது இதுவே!

அணுவிற்குள் அணுவாய் இருப்பதும், அப்பாலுக்கு அப்பாலாய், விரிந்து, பிரம்மாண்ட ஸ்வரூபமாகக் காட்சி தருவதும் ஒன்றேயாம். அதுவே பிரம்மம். பிரபஞ்சமாக இருப்பது நானாகவும் இருக்கிறது. சூட்சுமம் விளங்குகின்றதா? ஏதோ ஒரு பேராற்றல் தன் விருப்பத்தால் விரிந்தது. எல்லாம் தானே ஆனது. நான் என்பதும் அதுவே. உயிர்இருக்கும்வரை தான் எந்தப் படைப்பும் ஓடும்; ஆடும்; மூச்சுவிடும்; சண்டை போடும்; சாதிக்கும். உள்ளே இருக்கின்ற அந்த ஆற்றல் தன் பிடிப்பை விட்டுவிட்டால் சடப் பொருளின் இயக்கம் நின்றுவிடும். கட்டையாகக் கீழே சாயும். அது யானையாய் இருந்தால் என்ன? நானாக இருந்தால் என்ன? இந்த உண்மை நமக்குப் புரிந்துவிட்டால் நமக்குள் ஏது பிரிவினை? எதற்குப் போராட்டம்?

இந்த நிலை இளம் பருவத்திலேயே ஞானத்தால் ஏற்பட்டுவிடுமானால் அதன் பிறகு கர்மாவால் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். ஆனால் வாழ்க்கையின் உண்மைத் தன்மை புரிந்த நிலையில் பற்றின்றித் தாமரை இலைத் தண்ணீர்போல இருந்துகொண்டு அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்கலாம். சமுதாயமும் இப்படிப்பட்டவர்களால் நன்மை அடையும்.

கங்கா ஒரு காவியம் -3

எதையுமே உணராத  கருணையற்ற  காலச் சக்கரம்  இரு முறை  சுழன்றது. பலரது அறிவுரைகளை  ஏற்றுக் குமரேசனும் கங்காவும் இராமேஸ்வரம் சென்றனர். தேவி பட்டினம், நவ பாஷாண தீர்த்தத்தில் நாக சாந்தி செய்தனர்.  இராமேஸ்வரத்தில்  இருந்த எல்லாப் புண்ணியத் தீர்த்தக் கிணறுகளிலும் மந்திர உச்சாடனங்களுடன் நீராடிக் கடைசியில் அக்னி தீர்த்தமான கடலிலும் சாஸ்திரிகள் சொற்படி 108 தடவை கைகளைப் பற்றியபடி ஒன்றாக ஸ்நானம் செய்து, தம் குலம் விளங்கக் குழந்தைப் பேற்றினை, தங்கித்   தழைத்துவாழும் படியான  மழலைச் செல்வத்தை நல்கும்படி வேண்டினர்.  பல்வேறு தானங்களை முகம் கோணாமல் வாரி வாரி வழங்கி  வானுயர்ந்த கோவிலிலே தானுயர்ந்து நின்ற இராமநாதரைக் கண்டு கண்ணீர் மல்கித் தம் குறையைக் கூறி முறையிட்டனர்.  தேவர்கள் குறை தீர்த்த தீஞ்சுடராம் கந்தனின் தந்தை இவர்களுக்கும் அருள் பாலித்தான்.

line2

“குவா! குவா!” என்று மண்ணில் நாம் பெண்ணாய் வந்து பிறந்து விட்டோமே! எண்ணிலாத் துன்பங்கள் தொடருமே இப்பிறவியில்!’ என எண்ணியது போல் முதல் குரல் கொடுத்து அழுதது அக் குழந்தை. “பொண்ணு பொறந்திருக்குங்க ஐயா!” மருத்துவச்சியின் அறிவிப்பைக் கேட்டுப் பொண்ணா! ரொம்ப சந்தோ‘ம்! என்றான் குமரேசன். கங்காவின் முகத்தைச்சுருங்கச் செய்த சொல்லே குமரேசனுக்குத் தேனாக இனித்தது.
அன்றைக்கு ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தைக்கு சீதா லஷ்மி என்ற பெயரிட்டுக் கண் போல் காத்து வளர்த்தனர்.  இரண்டு ஆண்டுகளுக்குள் அடுத்துப் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. தாங்கள் ராமேஸ்வரம் சென்று வந்த நினைவின் நன்றியாகக் தம் கருத்தில் சதா குடி கொண்டிருக்கும் இறைவனின் திரு நாமத்தை அந்தக் குழந்தைக்குச் சூட்டினர். சீதாலஷ்மியும் ராமேஸ்வரனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.

அக்கால வாழ்வில் தான் எத்தனை எளிய எழில்முறை விரவிக்கிடக்கிறது! பக்தி வயலாம் இப் பாரத மண்ணின் மக்கள் சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும் இறைவனோடு இணைந்து வாழ்ந்தனர். அவர்களின் வாழக்கையின் ஒவ்வொரு சின்னச் செயல் கூட இறையுணர்வோடு கூடியதாக அமைந்திருந்தது.  சதா சர்வ காலமும் இறைவனை நினைக்கத் தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தம் இஷ்ட தெய்வங்களின் பெயர்களைச் சூட்டி உளமாற அழைத்து மகிழ்ந்தனர். அதனால் மண்ணை விட்டு மறையும் தருவாயிலும் மகேஸ்வரன் நினைவு வரா விட்டாலும் ராமா! என்றும் கிருஷ்ணா! என்றும் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை அழைத்து அதன் மூலம் உய்வடைந்தனர். ஆனால் இன்றோ, வாயில் நுழையாத, பொருளேதும் புரியாத ஏதேதோ பெயர்களை வைத்துக் கூப்பிடுகின்றனர். காரணத்தை மறந்த காரியமாக இது நடைபெறுகின்றது.
line2
காலச் சக்கரம் மேலும் பல முறை சுற்றிச் சுழன்றது. இப்போது குமரேசனின் குடும்ப அளவு பெருகியிருந்தது. பணம் சேர்ந்தது போலவே உறவினர் கூட்டமும் சேர்ந்தது.  ஆரம்பத்தில் ஓட்டலின் பின் புறத்தையே தன் வீடாகக் கொண்டு வாழ்ந்த குமரேசன் இப்போது ஒரு பழைய வீட்டைப் பாதி விலைக்கு வாங்கி அங்குக் குடியேறினான்.  கடையில் கங்கா செய்த வேலைகளைப் பல ஆட்கள் செய்தனர்  பம்பரம் போல் சுழன்று பணியாற்றிய கங்கா இப்போது சாட்டையாக இருந்துப் பிறரை வேலை வாங்கினாள்.  அதில் ஓர் அன்பும், அந்நியோன்யமும். அரவணைப்பும், தாராள மனப் பான்மையும் ஊடும் பாவுமாக இணைந்து பிறரைக் கட்டின.  இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்யத் துhண்டின. அவள் காட்டிய சுறுசுறுப்பும் விரைவும் அவர்களையும் பற்றிக்கொண்டன.  வியாபாரம் பெருகியது.  அவர்கள் நிலை உயர்ந்தது.
line2
ஓம்!  ஓம்! எனக் கோவில் மணி முழங்கிற்று. அதன் ஒலி மாலைத் தென்றலின் உதவியுடன் நான்கு புறங்களிலும் தவழ்ந்து சென்று ஊர் மக்களை, “இறைவனை வழிபட வாருங்கள்!” என அழைத்துத் திரும்பியது. மடந்தையரும் மங்கையரும் கரங்களில் எண்ணெய்க் கிண்ணம், அர்ச்சனைத் தட்டு, மலர்க் கூடை போன்றவற்றை ஏந்தி இறைவனிடம் தங்கள் மனக் குறைகளைக் கூறத் தம் குழந்தைகளுடன் கோவிலை நோக்கிச் சென்றனர். மேலும் அன்றைய ஸ்பெ‘ல் சந்தனக் காப்பு அலங்காரத்தில் வண்டார்குழலி அம்மையைத் தரிசிக்கவும், திருமேனியழகருக்குச் சாத்தப்படும் அன்னப்பாவாடையின் அழகை ரசிக்கவும், விசேஷமாகத் தருவிக்கப்பட்ட நாதஸ்வரக் கச்சேரியைக் கேட்டு மகிழவும், அந்த ஊர் மட்டுமின்றி அக்கம் பக்கத்து ஊர் மக்களும் வண்டி கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர்.

திருவேட்டைக்குடி என்ற திவ்ய நாமம் பெற்ற அந்த ஊரில் நடைபெறும் நான்கு நாளைய மாசி மகப் பெருவிழா அந்த வட்டாரத்தில் வெகு பிரசித்தம்.  அர்ச்சுனன் சிவ பெருமானை அறியாமல் எதிர்த்துச் சண்டையிட்டுப் பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற இடம் இத் திருவேட்டைக்குடி.. திரு உரு பெற்று வந்து வேட்டையாடி விளையாடிப் பக்தனின் குறை தீர்த்து வரம் நல்கியதால் இவ்வூரின் பெயரே திருவேட்டைக்குடியாயிற்று.

அங்கு மாசி மகப் பெரு விழா நான்கு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று தான் விடையாற்றி உற்சவம். அதனைத் தனது உபயமாக ஏற்று, மிக விமரிசையாக நடத்தித் தனது நன்னிலைக்குக் காரணமான திருமேனியழகருக்கு ஆண்டு தோறும் நன்றி செலுத்தி மகிழ்ந்தார் குமரேசன்.

thavilஅந்த மாலை நேரத்திலே அக்கோயில் திமிலோகப்பட்டது. கோயிலின் உள்ளே அம்மன் திருச் சன்னதிக்கு எதிரில் ஸ்பெஷ்லாகத் தருவிக்கப்பட்ட திருமலைராயன் பட்டினம் சகோதரர் நாதத்தை இனிமையாகப் பொழிந்து கொண்டிருந்தனர். தவில்காரருக்கு சன்மானம் அதிகமோ என்னவோ தெரியவில்லை, தவிலை வெளுத்துக் கட்டினார். அவர் அருகில் அரை நிர்வாணச் சிறுவர்கள் நின்று தம் காதுகளை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டு அவரது குடுமி அவிழும் அழகையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தது  வினோதமான காட்சியாகத் திகழ்ந்தது.  வந்திருந்த மக்களில் பெரும்பாலோர் கண்களைமூடி மெய் மறந்து இசையில் இசைந்திருந்தனர்.

பிரகாரத்தின் மற்றொரு பக்கத்தில் ஒரு சிறுவர் குழாம் ராஜா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களின் தர்பார் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயில் வாயிலுக்கு அருகில் உள்ள இலவ மரங்களுக்கு அடியில் வில் வண்டிகளும், கட்டை வண்டிகளும் கிடந்தன. வைக்கோலை மேய்ந்தபடி காற்றில் கலந்து வந்த நாதஸ்வர இசையை ரசிப்பதுபோல விழிகளை மூடிக் கழுத்தை அவ்வப்போது ஆட்டி ரசித்த மாடுகளின் மணியோசை இடையிடையே மனோகர த்வனியை எழுப்பின. அப்பொழுது தான் வந்து நின்ற ஒரு வில் வண்டியிலிருந்து இரண்டு பேர் பூக்கூடைகளையும் சரஞ் சரமான மாலைகளையும் இரண்டு பெரிய நிலை மாலைகளையும் மெது மெதுவாக இறக்கிப் பூவைப் பூப்போல் தூக்கிக் கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அந்தப் பகுதியே மலர்களால் மணத்தது. கோவிலின் மற்றொரு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த பாயின் மேல் அமர்ந்து நிறைய பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடுவே நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே தண்மதி போல மகாலட்சுமி போன்ற தேஜஸுடன் வீற்றிருந்தாள் கங்கா. குமரேசனின் உழைப்பும் உயர்வும் அவளது காதுகளிலும் மூக்கிலும் வைரங்களாக ஜொலித்தன. அனைத்து நகைகளிலும் அரியதோர் அணியாக உதட்டில் உலவும் புன்னகையுடன் அன்பான சொற்;களால் அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தாள் அவள். அப்போது அங்கு ஓடி வந்த சிறுமியிடம், “சீதா! அர்ச்சனை ஆரம்பிக்கப் போறான்னு அப்பாகிட்டே போய்ச் சொல்லி கூட்டிண்டு வா!” என்றாள்.

ஊர்ப் பிரமுகர்களுக்கு இடையே அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்த குமரேசன் மகளின் குரல் கேட்டு எழுந்தார். அவர் எழுந்ததும் உடன் அனைவரும் எழுந்தனர். “நான் பிறந்து வளர்ந்து வாழ்க்கையைக் கற்றதே இந்தக் கோவிலில் தான். இத்தெய்வங்களைத் துhய்மைப் படுத்த இந்தக் கைகள் எத்தனை குடம் தண்ணீரைத் துhக்கியிருக்கு தெரியுமா? பகவானுக்குப் படைக்க மடைப்பள்ளியிலிருந்து எத்தனை வகை உணவுகள் தயாரித்திருப்பேன். என் உடம்பில் உள்ள சத்து இந்தக் கோயில் தந்தது தான்! எதோ இந்தத்  திருமேனிஅழகர் அருளால் தான் இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்” என உணர்ச்சியுடன் அவர் கூறியதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள்  மனம் உருகினர்.  ஆனால் குமரேசனின் மனமோ, எனது இந்த முன்னேற்றத்தி;ற்கு இறையருள் மட்டுமா காரணம்? எத்தனை துன்பம் வந்தாலும் அயராது ஏற்று ஈடுகொடுக்கும் கங்காவிற்கும் அல்லவோ இப்பெருமை! என்று பெருமிதத்துடன் எண்ணியது.

அன்று அக் கோயிலில் நடைபெற்ற பூஜையின் சிறப்பையும் அலங்கார அற்புதத்தையும், அள்ளி வைத்த பிரஸாதங்களின் அருஞ் சுவையையும், நீண்ட பிரகாரத்தின் இரண்டு வரிசைகளிலும் அமர்ந்து வயிறார உண்ட மக்களின் மன நிலையையும் அடுத்த வருஷ உத்சவம் வரையிலும் அந்த வட்டார மக்கள் வாயார சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.