வாழ்க்கையின் கடைசி நிலை சந்நியாசம். உலக விருப்பங்களையும், பந்த பாசங்களையும், பொறுப்புக்களையும் அறவே ஒதுக்கி விட்டு, வீட்டில் இருந்தாலும் கூடத் தனிமையை விரும்பி இறை உணர்வோடு ஒன்றியிருத்தலும், எண்ணங்களையும், ஆசைகளையும் இல்லாமற் செய்து, பற்றற்று வாழ்கின்ற நிலையே இந்த சந்நியாசம் என்பது.
இந்நிலையில் இந்த உடலும் முதுமையினால் தளர்ந்துவிடும். உடல் தளர்ந்து போனாலும் ஆசை வயப்பட்டு இன்னும் ஓடித் திரியாமல், பிறருக்குத் தொந்தரவு தராமல், அடங்கியிருத்தலும் சந்நியாசம் தான். இப்படி இந்த முறையில் தம் வாழ்க்கையை வாழ்கின்றவர்கள் பாக்கியவான்கள். இப்படிப்பட்டவர்களே ஜீவன் முக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘இத்தகைய, பற்றறுத்தவர்கள் உடல் விழுந்தவுடன் பரவெளியில் கலந்து முக்தி அடைந்து விடுகிறார்கள். இவர்களுக்குப் பிறகு இவ்வுலகில் பிறப்பு எடுப்பது என்பது கிடையாது. மேல், கீழ் உலகங்களுக்கும் இவர்களின் ஜீவன் சென்று தங்குவது கிடையாது’.
‘இந்த ஜீவன்கள் அழியா நிலை அடைந்துவிடுகின்றன. ஆயிரம்கோடி சூரியப் பிரகாசமுடைய அந்த இடத்தை, சூரியன், சந்திரன், அக்னி போன்றவற்றின் ஒளியால் பிரகாசப்படுத்து முடியாத அந்த இயற்கைப் பேரொளியாகிய அண்டத்தை அடைந்த பின் அவர்கள் மீண்டும் பூவுலகிற்குத் திரும்புவதில்லை.’
ஆனால், இந்த நிலையை ஜீவன் அடைய முடியாமல் ஐம்புலன்களுடனும், மனம், புத்தியுடனும் சேர்ந்து அறியாமையுடன் செயல்படுகின்றபடியாலும், இது நான், இது என்னுடையது என்ற எண்ணத்துடனேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மரணிப்பதாலும் இந்த ஜீவாத்மா மறுபடி மறுபடி உடலெடுத்துப் பிறந்து வந்து சம்சாரக் கடலில் மூழ்கிப் போகிறது. இது தான் வாழ்வைப் பற்றிய உண்மை!
அப்பா! மூச்சு முட்டுகிறதா? இருந்தாலும் இப்போது இந்த கணத்தில் நமது சனாதன தர்ம்த்தின் அற்புதப் பெருமையை எண்ணிப் பாருங்கள். நமது முன்னோர் வழங்கிய இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவே இன்று மேற்குலகம் அலை மோதுகின்றது. ஆனால் நம்மவர்களோ நம் பெருமை மறந்து உடல் சார்ந்த வாழ்க்கை முறையில் மாறி, அதில் ஊறிப்போய் அழிந்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும் கேளுங்கள், கண்ணன் அருளமுதத்தை! ‘காற்று எப்படி வாசனை உள்ள இடத்திலிருந்து அதனை எடுத்துச் செல்கிறதோ, அந்த வாசனையை எப்படி எங்கும் பரப்புகின்றதோ, அதுபோல சரீரம், புலன்கள் ஆகியவற்றிற்கு உரிமையாளனாகத் தன்னை எண்ணிக்கொண்டு இயங்கும் ஜீவாத்மா, கடைசி காலத்தில் தன் உடலைத் துறக்கும்போது, அவ்வுடலில் அதுவரை இருந்து வந்த மனதையும், புலன்களையும் எடுத்துக்கொண்டு வேறொரு உடலில் பிரவேசிக்கின்றது. இவ்வாறாக அது இறந்தும், பிறந்தும் இவ்வுலக வாழ்வில் உழன்றுகொண்டிருக்கிறது.”
‘இப்படிப் பிறந்து பிறந்து மீண்டும் மீண்டும் புலன் வழிப்பாதையிலேயே அறியாமையுடன் சென்றுகொண்டிருக்கின்ற வரையில் இதற்கு விடுதலை இல்லை. யார் இந்த உண்மையை ஏதாவது ஒரு வேளையில் புரிந்து கொள்கின்றார்களோ அவர்கள் அப்பொழுதுதான் இந்த வாழ்க்கை பற்றி அறியத் தமது தேடலைத் துவங்குகின்றார்கள். இந்நிலையை அடையப் பிரம்மமும் துன்பங்களையும் தடைகளையும் தோல்விகளையும் அடுக்கடுக்காகத் தந்து அடி போடுகிறது”.
‘ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இந்த நிலை எனக்கு ஏற்பட்டது? என்று மனப்பூர்வமாகச் சிந்திக்கின்றவர்களும் தெய்வத்தை சரணடைந்தவர்களும் ஒரு வழியாகப் புலன் வழிப்பாதையை விடுத்து ஞான வழிப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்”.
‘இவ்வாறு மெய்யறிவாகிய ஞானமென்னும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர்கள் உண்மையை அறிந்து கொள்கின்றனர், யார் மனத்துதூய்மையை அடைகின்றார்களோ அவர்களுக்கே ஞானக் கண்கள் திறக்கும். வாழ்வின் உண்மை நிலை அப்போது புரியும்”.
இவ்வாறு உரைத்த கிருஷ்ணர் இனி தன்னைப் பற்றி மீண்டும் பேசுகின்றார். ‘சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகிய நான் தான் எல்லா உலகங்களிலும் பேரொளியாகப் பிரகாசிக்கின்றேன். எல்லா உயிரினங்களையும் என் சக்தியால் வாழ வைப்பதும், ரசமயமான சந்திரனாக உருவெடுத்து மூலிகைகளையும், தாவரங்களையும், வளர்த்துச் செழிக்க வைப்பதும் நான் தான்”.
‘பிராணிகளின் உடலுக்குள் வைஸ்வானரன் என்னும் அக்கினியாக நான் இருந்து, சுவைத்தல், குடித்தல், உறிஞ்சுதல், நக்குதல் என்னும் நான்கு விதங்களில் உணவைப் புசிக்கச்செய்து அவ்வுணவுகளை ஒன்றாக்கி எரித்து சீரணிக்கச் செய்கின்றேன். என்னால் தான் நினைவாற்றல், பகுத்தறிவு, ஐயம் தெளிதல் எல்லாம் நிகழ்கின்றன. வேதங்களும், வேத உண்மைகளும் அதை வகுத்தவனும் அவற்றை அறிபவனும் நானே”.
இந்த இடத்தில் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை நான் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்த செயல்கள் எல்லாமே இறை சக்திதான் செய்து கொண்டு வருகிறது. வாயில் போடுகின்ற உணவு எப்படியெல்லாம் மென்று விழுங்கப்படுகிறது என்று கண்ணன் சொல்கின்ற இந்த ஓர் உதாரணத்தின் மூலமே, இங்கு எல்லாமே அவன் தான் செய்கிறான் என்பதையும், அதற்கு இந்த உடல் வெறும் கருவி மட்டுமே என்பதையும் காட்டுகிறது. இனியாவது நான் செய்தேன்! என்று எதற்காகவும் கர்வப்படாமல், அவன் கருணை என்று பணிகின்ற பக்குவம் நமக்கு ஏற்படட்டும்.
‘இந்த உலகில் அழிபவர், அழிவற்றவர் என இரு வகை புருஷர்கள் உள்ளனர். இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக்கூடியவை. ஆனால் அச்சரீரங்களுக்குள் உறைகின்ற, அவற்றை இயக்குகின்ற ஜீவாத்மா அழிவற்றது”. அழிவது உடல் மட்டுமே. ஆத்மா அழிவற்றது என்பதே இதன் பொருள்.
‘இந்த இரண்டு வகை புருஷர்களைத் தவிர உத்தம பருஷர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரமாத்மா. பரம்பொருள், அவர் தான் பாதாளம், பூமி, வானுலகம் எனப்படும் மூவுலகங்களையும் மற்ற பிற உலகங்களையும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். அவர் அழிவற்றவர். அவரே எல்லோருக்கும் தலைவர்”.
இந்த இடத்தில் அர்ச்சுனன், இவர்களில் நீங்கள் யார்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணனின் பதில், ‘அர்ச்சுனா! அந்த உத்தமபுருஷன் நான் தான்! நான் அழிவு நிலையைக் கடந்தவன். அழியா நிலையில் இருக்கும் ஆத்மாவை விட மேலான உத்தம புருஷ நிலையில் நான் இருக்கிறேன். இந்நிலையில் எல்லாமாக இருந்துகொண்டே அதி உயர் நிலையிலும் இருக்கின்ற என்னை, இவ்வுலகம் பரமாத்மா என்று அழைக்கின்றது”.
நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய வியக்கத்தக்க அந்த உண்மை இங்கு நமக்காகத் திரும்பவும் விரித்துரைக்கப்படுகின்றது. சூட்சமமாகவும் சொல்லப்படுகிறது. அந்த உண்மையை நாம் மிகச் சரியாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான், கூறியது கூறல் குற்றம் எனத் தெரிந்தாலும், மனதில் பதிய வேண்டிய ஒன்று என்பதால் மீண்டும் ஒரு முறை இதனை விளக்குகின்றேன்.
அதாவது, பரமாத்மா தான் தன் விருப்பத்தால் இந்தப் பிரபஞ்சமாக, உயிரினங்களாக, மனித குலமாகத் தானே பல்வேறு வேடம் தாங்கிக் கர்மப்பின்னலைப் போட்டுக்கொண்டு, பிறந்து, வாழ்ந்து, நடித்துக்கொண்டிருக்கிறது. அது தானே மாயையாகவும் இருந்து அந்த மனிதப்பிறவியை ஆட்டிப்படைக்கின்றது.
தன்னைத் தானே அது மனிதனின் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு, மனதை வெளிப்புறமாகத் திருப்பிப் புலன்களின் வழியே செலுத்தி, அறியாமையுடன் மனிதனை அல்லாட வைக்கிறது. அடிபட்டு, மிதிபட்டு அந்த மனம் சிதைந்து, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று உண்மையாக அழத் துவங்குகின்ற போது ஏதாவது ஓரு வடிவில் அது தானே வந்து அழுபவனின் நிலைக்கு ஏற்றபடி அவனை வழி நடத்துகிறது.
ஜீவன் உண்மையிலேயே இந்த வாழ்க்கையால் மனம் வெறுத்துக் கடைத்தேற வேண்டும் என்று கதறினால் அப்படிப்பட்டவனின் உண்மைத் தன்மையை அது புரிந்துகொண்டு சத்தியத்தை அவனுக்கு உபதேசிக்க மனித உரு எடுத்துக் குருவாக வருகிறது. அப்படி அகில குருவாக அந்தப் பரமாத்மா கண்ணன் என்ற மனித உருவில் மனித குலத்திற்கே சரியான விதத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்காக வந்து பிறந்தார்.
உத்தம புருஷனாகிய ஆதி பகவன் மனித குலத்தை உய்விக்கத் தானே கண்ணனாய்ப் பிறந்திருப்பதைத் தனது உத்தம பக்தனாகிய அர்ச்சுனனுக்கு இதை விட வேறு எப்படிப் புரிய வைக்க முடியும்? அர்ச்சுனன் ஒரு கருவியாய் நின்று நமக்காக இந்த உபதேசத்தைப் பெற அதனை வியாசர் பகவத்கீதை என்னும் அறிய செல்வமாய் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். இதனை நன்றாக சிந்தித்துப் பார்த்து அந்தப் பரமாத்மாவின் பாத மலர் பணிந்து நன்றி தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அன்பர்களே! உணர்ச்சி வசப்பட்டு நான் இதனை எழுதவில்லை. உண்மையை உணர்ந்த பரவசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!
‘மூன்று நிலைகளில் செயல்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் நானே! அவற்றிற்கும் மேலான அவ்யக்த நிலையில் நுண்ணுணர்வாய், எல்லாமாய் இருக்கின்றபடியால் தான் இந்த உலகத்த்தில் மக்களாலும், வேதங்களாலும் புருஷோத்தமன் என்னும் திருநாமத்தால் பிரபலமடைந்திருக்கின்றேன்”.
‘மதி மயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்துகொள்கிறான். அப்படிப்பட்டவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அவனுக்கு பெறுவதற்கு என்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை. என்னிடமே ஈடுபாடு கொண்டவனாய் அவன் என்னைப் போற்றிப் பரவசமடைகிறான்.’
இவ்வளவையும் தெளிவாக அர்ச்சுனனுக்குக் கூறி விளங்க வைத்த புருஷோத்தமனாகிய கண்ணன் கடைசியில், ‘அர்ச்சுனா! இதுவரை நான் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள். இதை அறிந்துகொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும், அடைய வேண்டியதை அடைந்தவனாகவும் ஆகிறான்!” என்று சொல்லி முடிக்கின்றார்.
அந்தப் புருஷோத்தமனின் பேரருளால் நாமும் இந்த தெய்வ ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக ஆகிறோம். இதனைத் தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொரு அன்பர்களுமே இந்தப் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த கீதை என்னும் பேரமுதத்தை மீண்டு;ம் மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாகப் புரிந்துகொண்டு கீதை காட்டும் பாதையிலேயே நாம் இனி நடக்கப் பழக வேண்டும். புலன்வழிப் பாதையை விட்டு நீங்கி ஞான ஒளிப்பாதையில் இனி நடக்க வேண்டும். இது தான் நாம் இனி செய்ய வேண்டிய செயல்.
என்ன? பற்றின்மை என்னும் வாளினால் சம்சாரமாகிய அஸ்வத்த மரத்தை வெட்டத் துவங்கிவிட்டீர்களா? நல்லது. இதற்குக் கண்ணன் அருள் எப்போதும் துணை செய்யும்.